மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பழைய காந்தி மார்க்கெட் வளாகத்தில் பாராளுமன்ற நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 3 உயர்மின் கோபுர மின் விளக்குகளை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025
.

செ.வெ.எண்:-64/2025

நாள்: 16.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பழைய காந்தி மார்க்கெட் வளாகத்தில் பாராளுமன்ற நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 3 உயர்மின் கோபுர மின் விளக்குகளை திறந்து வைத்தார்

அதனைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட காமாட்சி மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டார்கள்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14,15,16 ஆகிய பகுதிகளில் இன்று (16.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் அமைக்கப்பட்டியிருந்து அரங்குகளை பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பழைய காந்தி மார்க்கெட் வளாகத்தில் தலா ரூ.10 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று உயர்மின் கோபுர மின் விளக்குகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். பின்னர் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட காமாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்கள். நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்லிய திட்டங்கள் இல்லாமல் சொல்லாத பல திட்டங்களையும் துவக்கியுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டங்களில் ஒன்றான “உங்களுடன் ஸ்டாலின்” என்ற முகாம் தொடங்கப்பட்டு பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வண்ணம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலுவலர்களை பார்க்க வேண்டுமென்றால் கால தாமதம் ஏற்படும் என்பதற்காகவும், போக்குவரத்து சிரமங்கள் உள்ளிட்ட இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாக கூடாது என்பதற்காகவும், அனைத்து அரசு அலுவலர்களும் உங்கள் வீட்டை தேடி, உங்கள் ஊரை தேடி வருகின்ற திட்டமாகும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் அதற்கு பெயர்தான் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமாகும். இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வந்துள்ளார்கள். சுமார் 46 சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நீங்கள் மனுக்கள் கொடுத்தால் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு வழங்கி உள்ளார்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் அவர்களுக்கு 540 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது. அதே போன்று இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் பள்ளிகளுக்கு சென்று வரும் வகையில் தனி பேருந்து வசதி செய்து தரப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற முறையை விட இந்த முறை சிறப்பு விதி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.இந்த முகாமில் மனுக்கள் கொடுத்தால் 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 3 சிறப்பு சலுகைகளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்ற பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற அரசின் உதவித்தொகை பெறும் பெண்கள் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்கள்.

மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் 1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைப் பயன்படுத்தி கல்லூரிகளில் சேர்ந்து சிறப்பாக உயர்கல்வி படிக்குமாறு தெரிவித்தார். போட்டித்தேர்வுகளுக்கான தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு, மாணவர்கள் படித்துகொண்டு வருகின்றனர்கள். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் உடல்நலத்தை காக்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை துவக்கியுள்ளார்கள். இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறையின் சார்பில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் பழனி இரயில்வே உயர் மேம்பாலம் கட்டப்படும்.

தூய்மையான நகராட்சிகளில் நம்முடைய ஒட்டன்சத்திரம் நகராட்சி 16 வது இடத்தைப்பெற்றுள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் மூலம் பல்வேறு சாலை மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நான்கு மாடி கட்டடத்துடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருவதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்கள். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சேமித்து வைப்பதற்காக குளிர்சாதன கிடங்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. அரசு பொருப்பேற்ற பின்பு நம்முடைய மாவட்டத்தில் எண்ணற்ற நான்கு வழி சாலைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, மாணவ, மாணவிகளுக்கு Spoken English கற்றுத் தருதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி.சுவேதா அவர்கள், உதவி ஆணையர் (கலால்) திரு.பிரபு அவர்கள், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி.சுவேதா அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பொறியாளர் திரு.சுப்பிரமணிய பிரபு அவர்கள், நகர் மன்ற தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி உட்பட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.