மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
செ.வெ.எண்:-77/2025
நாள்: 31.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சியில் இன்று (31.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற நோக்கில் அனைவரும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைவாழ் மக்கள் மருத்தவமனைகள் செல்வதற்கும், ரேஷன் கடைகளுக்கு செல்வதற்கும் கால்நடைகளை பயன்படுத்தியே சென்று வந்தனர். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சட்டமன்றத்தில் இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 2006-ஆம் ஆண்டு முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தார்சாலை வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பகுதி மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பதிவு அலுவலகக் கட்டடம் 12 எண்ணிக்கையில் கட்டப்பட்டுள்ளது. இதில், வடகாடு ஊராட்சிக்கு கட்டப்பட்ட புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பதிவு அலுவலகக் கட்டடமும் ஒன்றாகும். கண்ணணூர், கோட்டைவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தப்படாத “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்தார்கள். பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலுவலர்களை பார்க்க வேண்டுமென்றால் கால தாமதம் ஏற்படும் என்பதற்காகவும், போக்குவரத்து சிரமங்கள் உள்ளிட்ட இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாக கூடாது என்பதற்காகவும், அனைத்து அரசு அலுவலர்களும் உங்கள் வீட்டை தேடி, உங்கள் ஊரை தேடி வருகின்ற திட்டமாகும்.
இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வந்துள்ளார்கள். சுமார் 46 சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நீங்கள் மனுக்கள் கொடுத்தால் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு வழங்கி உள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு மட்டும் 119 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வடகாடு ஊராட்சிக்கு காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 35 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்துள்ளார்கள் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 20 இலட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.
மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் வரும்முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், அதற்கு ஏதுவாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.
இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்த முகாமிலேயே மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்க ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 822 முழு நேர கடைகளும், 478 பகுதி நேரக் கடைகளும், 122 நகரும் நியாய விலைக் கடைகளும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 140 முழு நேர கடைகளும், 119 பகுதி நேரக் கடைகளும், 6 நகரும் நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 107 நியாய விலைக் கடைகளும், 4 நகரும் நியாய விலைக் கடைகளும் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய விற்பனை முனைய இயந்திரத்தினை (Old POS-LO) கைரேகையுடன் கூடிய புதிய விற்பனை முனைய இயந்திரமாக (New POS –L1 வகை) மாற்றம் செய்யப்பட்டு 254 புதிய விற்பனை முனைய இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், விற்பனை முனைய இயந்திரம் இல்லாமல் செயல்படும் புதிதாக பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு 261 புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 62,672 குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 90,828 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பழைய விற்பனை முனைய இயந்திரத்தினை (Old POS-LO) கைரேகையுடன் கூடிய புதிய விற்பனை முனைய இயந்திரமாக (New POS –L1 வகை) மாற்றம் செய்யப்பட்டு 35 புதிய விற்பனை முனைய இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், விற்பனை முனைய இயந்திரம் இல்லாமல் செயல்படும் புதிதாக பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு 93 புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 11,542 குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 13,546 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 01.05.2021-அன்று 125 முழு நேர நியாய விலைக்கடைகள், 40 பகுதி நேர நியாய விலைக்கடைகள் இருந்ததன. பின்னர் 15 முழுநேர நியாய விலைகடைகளும், 75 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டது. நாளது தேதியில் 140 முழுநேர நியாயவிலைக்கடைகளும், 118 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் உள்ளது. மேலும், 9 பகுதி நேர நியாய விலைக்கடைகள் அரசு அனுமதி கிடைத்து திறக்கபடாமல் உள்ளது. 1 முழுநேர நியாயவிலைக்கடை, 3 பகுதி நேர நியாயவிலைக்கடை அரசு அனுமதிக்காகவும் என மொத்தம் 107 நியாயவிலைக்கடைகள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்படவுள்ள நியாயவிலைக்கடைகள் உள்ளது. 01.05.2025-க்கு பிறகு 4 திறக்கப்பட்ட நகரும் நியாயவிலைக்கடைகள் உள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.12.34 கோடி மதிப்பீட்டில் 107 நியாயவிலைக்கடைகள் புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 22 நியாயவிலைக்கடைகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், 1.82 கோடி மதிப்பீட்டில் 16 நியாயவிலைக்கடைகள் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.16.82 கோடி மதிப்பீட்டில் 145 நியாயவிலைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கிளைகள் 2 எண்ணிக்கையிலும், புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பதிவு அலுவலகக் கட்டடம் 12 எண்ணிக்கையிலும் கட்டப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகாடு ஊராட்சிப் பகுதிகளில் உள்ள சந்தனமலர்கள் மகளர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டிலும், காரியசாமி மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலும், அன்னைதெரசா மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டிலும், முத்தாலம்மன் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவி காசோலைகளை வங்கிகடன் இணைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகாடு ஊராட்சியில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின் ” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களில் தகுதியான 20 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளும், 5 நபர்களுக்கு குடும்ப அட்டைகளும், 2 குடும்ப உறுப்பினர்களை சேர்ந்த 6 நபர்களுக்கு பிறப்பு சான்றிதழ்களும், 7 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 15 நபார்டு பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வடகாட்டுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பரப்பளாறு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடம் ரூ.11.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பரப்பலாறு அணை மற்றும் தலைக்குத்து நீர்வீழ்ச்சியை சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தலில் சொல்லிய வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.