மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் காலை உணவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 16/07/2024
.

செ.வெ.எண்:-40/2024

நாள்: 15.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில்
காலை உணவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இன்று(15.07.2024) தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் சி.எஸ்.ஐ. அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்து மாணவர்களும் எந்த காரணத்தை கொண்டும் கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதில் தமிழக அரசு மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதாலும், சிலருடைய குடும்ப சூழல் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவினை முறையாக சாப்பிடுவதில்லை என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்து, அவர்களின் வயிற்றுப்பசியை நீக்க இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் செயல்படுத்தும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25.08.2023 அன்று திருக்குவளையில் தொடங்கி வைத்தார்கள். இதன்மூலம் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18.50 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர்.

இத்திட்டத்தின் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் 1153 பள்ளிகளில் பயிலும் 47,720 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் காலை உணவுத்திட்டத்தில் 156 பள்ளிகளைச் சேர்ந்த 11,091 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், இன்று முதல் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 15 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 701 மாணவ, மாணவிகள் பயனடையவுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இன்று(15.07.2024) காலை தொடங்கி வைத்தார்கள். அதன்படி, தமிழகத்தில் 3993 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.

ஆகமொத்தம் தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டத்தின் மூலம் மொத்தம் 20.73 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வாரம் 5 முட்டைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1.48 இலட்சம் நபர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள் நகர பேருந்துகளில் சென்றால் கட்டணமில்லா சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 7 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாட்டினை குடிசை இல்லா மாநிலமாக உருவாக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக ஒரு இலட்சம் வீடுகள் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி வழங்கப்படவுள்ளது. மேலும், பழுதடைந்த வீடுகளை பராமரிக்க ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2009 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேரம் நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தல் 230 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 70 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதிய நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில், தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 16 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு மூலம் பதிவுகள் மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கண் கருவிழி பதிவுகள் மேற்கொள்ள 36,000 நியாயவிலைக் கடைகளிலும் கண்கருவிழி பதிவு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டிலும் 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் 2000 கி.மீட்டர் நீளம் சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 கி.மீட்டர் நீளம் சாலைகள் மேம்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநிலம், வெளிநாட்டு மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணை, பழுதடைந்த வீடுகளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 12 பயனாளிகளுக்கு பணி ஆணை ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் திரு.சண்முகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி தாகிரா, திரு.வேதா, வட்டாட்சியர்கள் திரு.சசி, திரு.முத்துச்சாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.