மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் தலைமையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் பழனியில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 30/07/2024
.

செ.வெ.எண்:-69/2024

நாள்:-25.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் தலைமையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் பழனியில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் தலைமையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி கூட்டரங்கில் இன்று(25.07.2024) நடைபெற்றது.

சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., அவர்கள், தவத்திரு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலாய சுவாமிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அ.பிரதீப், இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., திருமதி சி. ஹரிப்ரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

சொன்னதை செய்திடும் அரசு திராவிட மாடல் அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக வரும் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட அனுமதி அளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

தமிழ் கடவுள் முருகபெருமானுக்கு, இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துாரில் பெரும் வரைவுத்திட்டம் ஏற்படுத்தப்பட்டு, கடற்கரை பகுதியில் கற்கள் கொட்டுவது, பக்தர்கள் தங்குமிடங்களை புதுப்பித்து கட்டுவது, யானை மண்டபம் கட்டுவது, அர்ச்சகர் பயிற்சி பள்ளி கட்டுவது என ரூ.400.00 கோடி செலவில் பணிகளை நிறைவேற்றி திருச்செந்துார் முருகனுக்கு பெருமை சேர்த்திட்ட ஆட்சி இந்த ஆட்சி ஆகும்.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் குடமுழுக்கை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது இந்த திராவிட மாடல் ஆட்சி. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றத்தில் ரூ.70.00 கோடி மதிப்பீடடில் பெருந்திட்ட வரைவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருத்தனியில் ரூ.160.00 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 45 சதவீதம் பணிகள் நிறைவுபெறுள்ளன. அதேபோல் சுவாமிமலையில் பக்தர்கள் ஏறுவதற்கு சிரமத்தை தவிர்க்க மின்துாக்கி ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழமுதிர்ச்சோலையில் திருக்கோயிலுக்கு தேவையான பணிகள் நிறைவேற்றப்ப்டு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டது. அதேபகுதியில் அழகர்கோயிலில் ரூ.40.00 கோடியில் பெருந்திட்ட வரைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பழனியில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, முருக பக்தர்களாளல் பேசப்படும் அளவிற்கு இந்த மாநாடு பெருமை கொள்ளும், பெருமிதம் கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் 5 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1300 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். இதில் வெளிநாட்டினர் 39 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். இதுதவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், 4 நீதியரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், இந்த மாநாட்டில் விழா மலர் மற்றும் ஆய்வுக்கட்டுரை மலர் என இரண்டு மலர்கள் வெளியிடப்படவுள்ளன.

மேலும், முருகன் பெருமையை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், முருகன் புகழை சொல்லும் கும்மி ஆட்டம், கந்தசஷ்டி கவசம் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாநாடு காலை 8.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், பின்னர் மதியம் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டை முன்னிட்டு, 8 இடங்களில் அலங்கார வரவேற்பு வளைவுகள், மாநாட்டு கொடி, 8000 பக்தர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் கொட்டகை அமைக்கப்படவுள்ளன.

மாநாட்டுக்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டும் என்பதால் சுகாதாரப் பணிகளில் அதிக கவனம் செலுத்திட வேண்டும். மாநாட்டுப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்யவும், அதற்காக வெளியூர்களில் இருந்து துாய்மைப் பணியாளர்களை பயன்படுத்திட வேண்டும். மாநாட்டுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பிரத்யேகமான வசதிகளுடன் கூடிய மருத்துவ வாகனங்களுடன் மருத்துவ முகாம்கள் அமைத்திட வேண்டும். தேவையான அளவு பேருந்துகள் இயக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், குடிநீர் வழிந்தோடுவற்கு வசதியாக கால்வாய் வசதி ஏற்படுத்திடவும், இயற்கை உபாதைகளை கழிப்பறைகளை அதிகளவில் அமைத்திடவும் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அரங்கத்திற்கு சிரமமின்றி வந்து செல்வதற்கு வசதியாக சக்கரநாற்காலிகள் மற்றும் அதை இயக்குவதற்கான ஆட்களுடன் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

இரண்டு நாள் மாநாட்டில் 30,000 நபர்கள் சாப்பிட வசதியாக ஆங்காங்கே ஸ்டால்கள் அமைத்து உணவு வழங்கிடவும், பக்தர்கள் அமர்ந்து சாப்பிடவும் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். பக்தர்கள் சாப்பிட்ட பின்னர் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்திட வேண்டும்.

மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகளை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல்லுாரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 450 பேர் இரண்டு நாட்களும் சீருடையுடன் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்ப்பவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக தமிழ்கடவுள் முருக பக்தர்கள் முழுமையாக பாராட்டும் விதமாக அமையும். மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்படும் கண்காட்சி, மாநாடு முடிவடைந்த பின்னர் ஒருவாரம் பக்தர்கள் பார்வைக்காக தொடர்ந்து அமைக்கப்படவுள்ளது, என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை திருக்கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், பேராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் துறை. சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை. நெடுஞ்சாலைத்துறை. நீர்வளத்துறை பொதுப்பணித்துறை போக்குவரத்துத்துறை உணவு பாதுகாப்புத்துறை. மின்சார வாரியம். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.

முன்னதாக, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், மாநாடு நடைபெற உள்ள மைதானத்தை பார்வையிட்டு, மாநாட்டு அரங்கம், உணவுக்கூடம், வாகனங்கள் நிறுத்துமிடம், ஆய்வரங்கம். அறுபடை வீடுகளின் அரங்கங்கள். புகைப்படக் கண்காட்சி, 30 தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கம் அமைக்கப்படும் இடங்களை நேரில் பார்வையிட்டனர்.

இக்கூட்டத்தில், தலைமை பொறியாளர் திரு.பொ.பெரியசாமி. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் திருமதி பா.பாரதி, திரு.செ.மாரிமுத்து, திரு.ச.இலட்சுமணன். திரு.பொ.ஜெயராமன், திருமதி கோ.செ.மங்கையர்க்கரசி, திருக்கோயில் அறங்காவலர்கள் திரு சமணிமாறன். திரு.கே.எம்.சுப்பிரமணியன். திரு.ரா.ராஜசேகரன் திருமதி ஜெ.சத்யா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.