மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/07/2024
.

செ.வெ.எண்:-41/2024

நாள்: 15.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இன்று(15.07.2024) தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதோடு, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். குழந்தைகள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இன்றைய குழந்தைகள்தான் நாளை எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும், அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்து, அவர்களின் வயிற்றுப்பசியை நீக்க இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சத்துணவுத் திட்டத்தில் வாரத்தில் 5 முட்டைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அந்த வகையில் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் செயல்படுத்தும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25.08.2023 அன்று திருக்குவளையில் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 18.50 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக, திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, ஊராட்சிப் பகுதிகளில் 34 பள்ளிகளைச் சேர்ந்த 960 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1293 மாணவ, மாணவிகளுக்கும், என மொத்தம் 49 பள்ளிகளைச் சேர்ந்த 2,253 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் பணிகள் 25.08.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்துரு, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் செயல்படும் 1,153 பள்ளிகளைச் சேர்ந்த 58,330 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இன்று(15.07.2024) காலை தொடங்கி வைத்தார்கள். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 156 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 11,076 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1309 பள்ளிகளில் பயிலும் 69,406 மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயனடைகின்றனர்.

இத்திட்டத்தின்படி. பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி, புதன் கிழமைகளில் அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமைகளில் வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமைகளில் சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி(இனிப்பு) ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு சிறப்பான திட்டமாக திகழ்கிறது. மேலும், இத்திட்டத்தினை இந்தியாவில் வேறு சில மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்றி காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்றுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 4095 வீடுகள் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. மேலும், பழுதடைந்த வீடுகளை பராமரிக்கும் திட்டத்தில் 6149 ஓட்டு வீடுகள், 3379 கான்கிரீட் வீடுகள் முதற்கட்டமாக சீரமைக்கப்படவுள்ளன, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 16 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக பணி ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு பழுதடைந்த வீடுகளை பராமரிப்பதற்கான பணி ஆணைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி ஹேமலதா மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி பத்மாவதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் திரு.சக்திமுருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) திரு.வீராச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவர்கள் திரு.அருள்கலாவதி, திரு.குமாரவேல், ஆத்துார் வட்டாட்சியர் திரு.வடிவேல்முருகன், சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் திருமதி பிரதீபா கனகராஜ், காந்திகிராமம் ஊராட்சி தலைவர் திருமதி தங்கமாரியம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.