மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.63.25 இலட்சம் மதிப்பீட்டில் 25 மின்கல வண்டிகள், 368 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலை இல்லா வேஷ்டி, சேலைகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2024
.

செ.வெ.எண்:-68/2024

நாள்:28.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.63.25 இலட்சம் மதிப்பீட்டில் 25 மின்கல வண்டிகள், 368 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலை இல்லா வேஷ்டி, சேலைகளை வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துாய்மை பாரத இயக்கம்(ஊரகம்) மற்றும் 15-வது நிதிக்குழு மானியம் இணைந்த திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள 22 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.63.25 இலட்சம் மதிப்பீட்டில் 25 மின்கல வண்டிகள், 368 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலை இல்லா வேஷ்டி, சேலைகளை பயனாளிகளுக்கு இன்று(28.10.2024) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் ஆத்துார் பகுதியில் பல்வேறு துறைகள் சார்பில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024-2025-ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.67.00 கோடி அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆத்துார் தொகுதியில் தொடங்கப்பட்ட 2 கல்லுாரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக சுமார் ரூ.100.00 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு கல்லுாரி கட்டடம் முழுமையடையும் நிலையில் உள்ளது.

அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிருபித்துக்காட்டியுள்ளார். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சோஷியலிஷத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.

வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சத்துணவுத் திட்டத்தில் சுமார் 20000 வேலைவாய்ப்புகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு, அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கலைஞரின் கனவு இல்லம் வெற்றிகரமான திட்டம். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் ஒரு சரித்திர திட்டமாகும். 9,600 கி.மீட்டர் நீளம் சாலைப் பணியில் இன்னும் 20 கி.மீட்டர் பணிகள்தான் முடிக்கப்பட வேண்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைகை அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீரை கொண்டுவர திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்களை துார்வாரி, மழைநீரை சேமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 2,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஆத்துார் வட்டத்தில் மொத்தம் 52,750 குடும்ப அட்டைகள் உள்ளன. இங்கு 61 முழுநேர நியாயவிலைக் கடைகள், 31 பகுதி நேர நியாயவிலைக் கடைகள், 3 நகரும் நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 95 நியாயவிலைக்கடைகள் உள்ளன.

துாய்மை பாரத இயக்கம்(ஊரகம்) மற்றும் 15வது நிதிக்குழு மானியம் இணைந்த திட்டத்தில் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக செய்திட ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.63.25 இலட்சம் மதிப்பீட்டில் 25 மின்கலன் வண்டிகள், ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 368 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளி திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் முதியோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலை இல்லா வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொன்னதை செய்வதோடு மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் திருமதி ம.ஹேமலதா மணிகண்டன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.