மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், முருநெல்லிக்கோட்டை, குருநாதநாயக்கனுார், கே.புதுக்கோட்டை மற்றும் கொத்தப்புள்ளி ஆகிய ஊராட்சிகளில் ரூ.4.08 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
செ.வெ.எண்:-53/2024
நாள்:-22.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், முருநெல்லிக்கோட்டை, குருநாதநாயக்கனுார், கே.புதுக்கோட்டை மற்றும் கொத்தப்புள்ளி ஆகிய ஊராட்சிகளில் ரூ.4.08 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை, குருநாதநாயக்கனுார், கே.புதுக்கோட்டை, கொத்தப்புள்ளி ஆகிய ஊராட்சிகளில் ரூ.4.08 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(22.11.2024) திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்யார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் முருநெல்லிக்கோட்டை ஊராட்சி, திராட்சைநகரில் 6 ஏக்கர் பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை இன்று(22.11.2024) தொடங்கி வைத்தார். தொடர்ந்து சுள்ளெறும்பு மேய்கால் நிலத்தில் ரூ.4.04 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கி வைத்தார்.
முருநெல்லிக்கோட்டை ஊராட்சி, முருநெல்லிக்கோட்டையில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், சுக்காம்பட்டி மற்றும் சுற்ளெறும்ப ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தலா ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடகமேடை, குருநாதநாயக்கனுார் ஊராட்சி கரட்டுப்பட்டியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், குருநாதநாயக்கனுாரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு ஊறுதித் திட்டத்தில் ரூ.28.01 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், கே.புதுக்கோட்டை ஊராட்சி, புதுாரில் கனிமவள நிதி ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மற்றும் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், கே.புதுக்கோட்டை ஊராட்சியில் ரூ.10.42 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக்குழு பணிக்கூடம் மற்றும் புதிய நர்சரி பண்ணை, கொத்தப்புள்ளி ஊராட்சி, தோப்புப்பட்டியில் நபார்டு திட்டத்தில் ரூ.2.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் என மொத்தம் ரூ.4.08 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த விழாக்களில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் 1.18 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள் முதலமைச்சர், இது உங்கள் அரசாங்கம், யார் யாருக்கு அரசு திட்டங்கள் சேரவில்லை என்பதை மிகவும் கண்காணித்து, அந்த திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைவருக்கும் சென்றடையும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் நல்ல பொற்கால அரசு இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் வழங்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6000 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, 20,000 கி.மீட்டர் நீளம் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் சாலைப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வேலைவாய்ப்பிற்கு காத்திருப்போர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் நிறைய வேலைவாய்ப்புகள் வர இருக்கிறது. கல்வி மேம்பாட்டிற்காக திண்டுக்கல் மாவட்டத்தில 6 கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
100 நாள் வேலை திட்டத்தை பொறுத்தவரை ஒன்றிய அரசு வழங்கும் நிதி தாமதமாக கிடைக்கிறது. இத்திட்டத்தில் வேலைநாட்கள் மற்றும் ஊதியத்தையும் அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திட்டங்களை கொண்டு வருவது முக்கியமல்ல, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வது அரசின் கடமையாகும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்யப்படும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராட்சியிலும் சுமார் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டங்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புகழை உயர்த்தியுள்ளது.
மக்களின் எண்ணங்களை மதிக்கும் அரசாகவும், 8 கோடி மக்களில் கடைகோடியில் வசிக்கும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அரசாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, வருங்காலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், கொத்தப்புள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திருமதி ராஜேஸ்வரி தமிழ்செல்வன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.