மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள் சின்னாளபட்டியில் ரூ.78.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
செ.வெ.எண்:-55/2024
நாள்:-20.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள் சின்னாளபட்டியில் ரூ.78.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆய்வகம் மற்றும் அலுவலகம், சின்னாளபட்டி, வடக்குத் தெருவில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நாடகமேடை, செக்காபட்டியில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறை கட்டடம் என மொத்தம் ரூ.78.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(20.12.2024) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனி மனிதனுக்கு மருத்துவம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் சின்னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வகம் மற்றும் அலுவலகம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவசர சிகிச்சைப் பிரிவு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றையதினம் சின்னாளப்பட்டி பகுதியில் மொத்தம் ரூ.78.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆத்துார் தொகுதியில் 2 கல்லுாரிகள் தொடங்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒரு கல்லுாரி கட்டடம் முழுமையடையும் நிலையில் உள்ளது.
மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவும், நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, வருங்காலத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இவ்விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மகேஸ்வரி முருகேசன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ஆர்.ராஜா, சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் திருமதி இரா.பிரதீபா, பேரூராட்சி துணைத்தலைவர் திருமதி பா.ஆனந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரா.செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆர்.ஆனந்தீஸ்வரி, மருத்துவ அலுவலர் மரு.என்.சிவக்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.