மூடு

முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 17/05/2025

செ.வெ.எண்:-55/2025

நாள்:-16.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

2025-26ஆம் கல்வி ஆண்டில் இச்சான்றினை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திண்டுக்கல் மூலம் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். இச்சான்று பெற கல்லூரி படிப்பிற்கான விண்ணப்ப படிவம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளிமாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சார்ந்தோர் ஆதார் அட்டை, படைவிலகல் சான்று முழுவதும் மற்றும் முன்னாள் படைவீரரின் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் முந்தைய கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றிதழை 2025-26-ம் கல்வியாண்டிற்கு பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தும் நேர்வுகளில் கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகத்தால் சரிபார்ப்பு செய்யப்படும்போது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு படிப்பிற்காக (Course) பெறப்படும் சார்ந்தோர்கள் சான்று அந்த படிப்பிற்கு மட்டுமே பொருந்தும். இச்சான்றினை மற்றொரு படிப்பிற்கு பயன்படுத்திடல் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் 2025-26-ம் கல்வி ஆண்டில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் கல்லூரி சேருவதற்கான சார்ந்தோர் சான்று பெற்று பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.