மூடு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2025
.

செ.வெ.எண்:-66/2025

நாள்:27.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(27.10.2025) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை-2025 முன்னெச்சரிக்கையை எதிர்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 84 பகுதிகள் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறிப்பட்டுள்ளன. அதில் 24 பகுதிகள் அதிகம் பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 4 பகுதிகள் நடுத்தர பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 56 பகுதிகள் குறைவாக பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 75 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் பள்ளிக்கூடங்கள், மக்கள் மன்றங்கள், திருமண மண்டங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக 12.09.2025 அன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையிலும் அனைத்து அலுவலர்களுக்கு கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதன் தெடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மழை, வெள்ளம், மண்சரிவு போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாதிரி போலி ஒத்திகை நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று(27.10.2025) தொடங்கி வைக்கப்பட்டது.

மேற்கண்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வில் பேரிடர் காலங்களில் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் மீட்புக் கருவிகளின் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது-

வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் வாயிலாக பல்வேறு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் கடந்த மாதம் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த மாதமும் இக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படும் சமயத்தில் உடனடியாக மீட்பு பொருட்களை வழங்குவதற்கு அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் தீயணைப்புத்துறையின் மூலமாக பருவமழையின் போது இடிபாடுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்பது குறித்தும் ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தீயணைப்புத்துறைக்கு பல்வேறு வகையான நவீன இயந்திரங்களுடனான வாகனத்தினை வழங்கினார்கள். மின்சாரம் முழுமையாக தடைபட்டாலும் வண்டியில் உள்ள ஜெனரேட்டரின் வாயிலாக மீன்சாரத்தை பெறும் வகையில் இந்த வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையின் வாயிலாக பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைக்காக வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும், கொடைக்கானல் பகுதியிலும் குழு அமைக்கப்பட்டு வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். நிலக்கோட்டைப் பகுதிகளில் நெல் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், 5 நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டதில் 2 கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.

இந்தஒத்திகை நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செல்லப்பாண்டியன்(பொறுப்பு), மாவட்ட ஆட்சித்தலைவன் நேர்முக உதவியாளர் (பொது) திரு.மு.கோட்டைக்குமார், உதவி மாவட்ட தீயணைப்பு மற்றும் தீ தடுப்பு அலுவலர் திரு.மயில்ராஜ், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் திருமதி.செ.மணிமொழி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.