மூடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 20/09/2025
.

செ.வெ.எண்: 80/2025

நாள்: 19.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.09.2025) நடைபெற்றது.

இன்றையக் கூட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு வட்டம், கூவனூத்து ஊராட்சி நொச்சியோடைப்பட்டி ஊராட்சி, கோட்டை புதூரில் சாலை மற்றும் லைப் சென்டர் முதல் சிறுமலை அடிவாரம் வரை சாலையை சீரமைக்கவும், எம்.பஞ்சம்பட்டி கிராமத்திற்கு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் உழுவதற்கு 5 கலப்பை, கொக்கி கலப்பைகள் வழங்கவும், வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் வாடகை நிர்ணையத்தொகை ரூ.500-ஆக குறைக்கவும், விருவீடு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும், மின்சார துறையின் சார்பில் பவர்கிரிட் அமைப்பதற்கு நிலம் பெறப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 44 மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 58 மனுக்கள் பெறப்பட்டதில் 24 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலமாக குளங்கள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1000 குளங்கள் உள்ளது. கடந்த ஆண்டில் 252 குளங்கள் இலக்கீடு பெறப்பட்டதில் தற்பொழுது 170 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 102 குளங்கள் இலக்கீடு பெறப்பட்டதில் 32 குளங்கள் சீரமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 19.09.2025 காலை 6.00 மணி நிலவரப்படி, பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 25.79 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 66.39 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 57.94 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 41.59 அடி) நீர்மட்டம் 44.90 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 18.90 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 25.00 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2025 முதல் 16.09.2025 வரை யூரியா உரம் விநியோகம் 3385 மெ.டன், இருப்பு 1964 மெ.டன், டிஏபி விநியோகம் 1386 மெ.டன், இருப்பு 2596 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 1390 மெ.டன், இருப்பு 1174 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 670 மெ.டன், இருப்பு 988 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 1436 மெ.டன், இருப்பு 5084 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 205 மெ.டன், இருப்பு 135 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 395 மெ.டன், இருப்பு 153 மெ.டன் என மொத்தம் 8867 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 12,094 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.

இக்கூட்டத்தில் பஞ்சம்பட்டியை சேர்ந்த விவசாயி வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயத்திற்கு பம்பு செட் வழங்குவதற்கு போடப்பட்ட 12 %GST வரியினை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். தென்னை மரத்தை சேதம் செய்யும் ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒட்டுண்ணி அட்டை வழங்க வேண்டுமென தெரிவித்தார். நெல் மற்றும் பருத்தியின் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டுமென தெரிவித்தார்.

கம்பிளியம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி தனியார் துறைகள் ஒரு கோழிக்குஞ்சினை ரூ.6.50 மதிப்பீட்டில் வழங்கும் நிலையில் கோழிக்குஞ்சுகள் தரமில்லாமல் உள்ளது. எனவே தனியார் துறைகள் கோழிக்குஞ்சுகள் நல்ல முறையில் தரமானதாக வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கம்பிளியம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள 20 கிராமங்களிலும் சுமார் மொத்தம் 20,000 கால்நடைகள் உள்ளன. எனவே அதனை பராமரிப்பதற்காக கம்பிளியம்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தருமாறு தெரிவித்தார். மேலும் கால்நடை கணக்கெடுப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு தெரிவித்தார்.

பழனி தாலுகா ஐவர்மலை பகுதியில் செங்கற்சூலை அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. எனவே அதனை அகற்ற வேண்டும் என தெரிவித்தார். மற்றும் சிவஞானபுரத்தை சேர்ந்த விவசாயி நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை விரைந்து எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். எருவனம்பட்டி, விராலிப்பட்டி ஆகிய கிராமங்களில் கால்வாய்கள் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரைவில் தெரிவிக்க வேண்டுமென தெரிவித்தார்.

வத்தலகுண்டு பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் கொப்பறை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்துத்தர வேண்டுமெனவும் மற்றும் வேளாண்மைத் துறையின் மூலம் சணப்பு விதை வழங்கிட வேண்டுமெனவும் விவசாயி கோரிக்கை வைத்தார். அதனைத்தொடர்ந்து கூவனூத்து கிராமம், நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோட்டைப்புதூர் வழியாக சிறுமலை அடிவாரம் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்டல் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டுமென தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.ஸ்ரீ ராகவ் பாலாஜி, இணை இயக்குநர்(வேளாண்மைத்துறை) திரு.அ.பாண்டியன், இணை இயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) மரு.பாபு, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருமதி உமா, வேளாண்மை துணை இயக்குநர் திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.