விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
செ.வெ.எண்:72/2026
நாள்: 26.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (26.02.2026) நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையினை வெளியிட வேண்டுமெனவும், வேடசந்தூர் பகுதியில் அடிக்கடி வெடி சத்தம் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். வெடிசத்தம் எங்கிருந்து வருகிறது என்று விரைவில் கண்டுபிடித்திட வேண்டும். மேலும், வேடசந்தூர் பகுதியில் இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக வண்டல் மண் எடுக்கப்பட்டு செங்கல் சூளைக்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வண்டல் மண் எடுக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். மேலும், விளாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி, ஆயக்குடி மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் ஆறு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விளாம்பட்டி பகுதியில் நெல் அறுவைடைக்கு தயார் நிலையில் இருப்பதால் விளாம்பட்டி பகுதியில் 3 நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டுமெனவும், இரண்டாம் போக நெற்பயிர் பாசனத்திற்கு வருகின்ற மார்ச் மாதம் 15-ஆம் தேதி வரை தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமெனவும் தெரிவித்தார். தொடர்ந்து, குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னகுளத்தில் கடந்த சில நாட்களாக வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. அதனை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், கனிம வளத்துறையினர் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து சட்டத்திற்கு புறம்பாக வண்டல் மண் எடுப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி, வெள்ளோடு பகுதியில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தங்கள் பகுதியில் உள்ள கிணறு மற்றும் தென்னை மரத்திற்கு உரிய தொகை நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, தென்னை மரங்கள் மற்றும் கிணற்றிற்கு வழங்கும் தொகையினை மறு மதிப்பீடு செய்து உரிய தொகையினை வழங்கிட வேண்டுமென தெரிவித்தார். மேலும், பஞ்சம்பட்டியைச் சேர்ந்த விவசாயி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்கு பெறப்பட்ட கடன்தொகையினை தள்ளுபடி செய்திட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவு விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு வியாபாரிகள் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் அரசே விவசாயிகளிடம் மக்காச்சோளத்தினை கொள்முதல் செய்து அரசு நிர்ணயித்த தொகையினை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென்று விவசாயப் பெருமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர். விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, விவசாயிகள் தங்களுடைய பொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பொருளீட்டுக்கடனில் வைத்து 75 சதவீதம் கடன் பெற்று பயன்பெறலாம் எனவும், விலை அதிகமாக இருக்கும் பொழுது சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்து பயன்பெறலாம் எனவும், 75 சதவீதம் பெற்ற கடனை வட்டியில்லாமல் அரசிற்கு செலுத்திக்கொள்ளலாம் எனவும் விவசாயப் பெருமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பழநி ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயி யானைகள் தென்னை மரத்தினை வேரோடு பிடுங்கி நஷ்டம் ஏற்படுத்துகிறது. மேலும், ஆயக்குடியிலிருந்து மலைப்பகுதிக்கு செல்லும் சாலையில் அதிகமான வேகத்தடைகள் உள்ளன. இப்பகுதியில் கொய்யா அதிகமாக பயிரிடப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட கொய்யாவினை விற்பனைக்கு எடுத்துச் செல்லும்போது வேகத்தடைகளால் அதிகம் சிரமம் ஏற்படுகிறது. எனவே, வேகத்தடையினை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 55 மனுக்கள் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்திற்கு 89 மனுக்கள் பெறப்பட்டதில் 69 மனுக்களுக்கு பதில் விபரம் பெறப்பட்டு 20 மனுக்கள் நிலுவையில் உள்ளன. பிப்ரவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதா நாள் கூட்டத்தில் 55 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 42.03 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 73.57 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 46.95 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 62.06 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 18.15 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 21.55 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2025-ஆம் ஆண்டு குளிர் பருவகாலமான ஜனவரி முதல் பிப்ரவரி வரை சராசரியாக 36.12 மி.மீ மழையளவும், கோடை பருவகாலமான மார்ச் முதல் மே வரை சராசரியாக 182.75 மி.மீ மழையளவும், தென்மேற்கு பருவகாலமான ஜுன் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 118.62 மி.மீ மழையளவும் பொழிந்துள்ளது. வடகிழக்கு பருவகாலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை 334.51 மி.மீ மழையளவு பொழிந்துள்ளது. மேலும், பிப்ரவரி-2026-ஆம் மாதத்தில் சராசரியாக 44.7 மி.மீ மழையளவு பெய்ய வேண்டும். ஆனால், பிப்ரவரி 23.02.2026-ஆம் தேதிவரை 35.2 மி.மீ மழையளவு பொழிந்துள்ளது. எனவே, பிப்ரவரி-2026-ஆம் மாதத்தில் இயல்பான மழையளவைக் காட்டிலும் அதிகமான மழையளவு பொழிந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2025 முதல் 20.02.2026 வரை யூரியா உரம் விநியோகம் 15,968 மெ.டன், இருப்பு 3,250 மெ.டன், டிஏபி விநியோகம் 3,120 மெ.டன், இருப்பு 2,710 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 4,320 மெ.டன், இருப்பு 1,270 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 1,522 மெ.டன், இருப்பு 893 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 10,326 மெ.டன், இருப்பு 7,108 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 1,120 மெ.டன், இருப்பு 300 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 1,976 மெ.டன், இருப்பு 138 மெ.டன் என மொத்தம் 38,352 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 15,669 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. எனவே, விவசாயிகள் அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் உரங்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) திரு.கோவிந்தராஜ், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) டாக்டர்.விஷ்ணு கந்தன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருமதி.உமா, துணை இயக்குநர்(தோட்டக்கலைத்துறை) திருமதி.காயத்ரி தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.நாகேந்திரன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) திரு.ச.நாகராஜன் அவர்கள் ஆகியோர் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.