அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு-2024 தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நடைபெற்றது.
செ.வெ.எண்:-83/2024
நாள்:-30.07.2024
திண்டுக்கல் மாவட்டம்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு-2024 தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு-2024 தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(30.07.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லுாரி வளாகத்தில் 24.08.2024 மற்றும் 25.08.2024 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு-2024 நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் என ஏராளமானோர் பழனி நகருக்கு வருகைபுரியவுள்ளனர். எனவே, பழனி செல்லும் சாலைகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாநாட்டு திடலில் உள்கட்டமைப்பு வசதிகள், இருக்கை வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடை அலங்கார அமைப்புகள், வழிகாட்டி பலகைகள், உணவு கூடம், ஓய்வுக் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்யப்பட வேண்டும். பக்தர்கள் உணவு அருந்துவதற்கு ஏதுவாக கல்லுாரி வளாகத்தில் உள்ள உணவு அருந்தும் கூடங்களை சிறப்பாக மராமத்து செய்திட வேண்டும். ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே கல்லுாரி வளாகத்தில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் மராமத்து செய்திட வேண்டும். மாநாடு நடைபெறும் வளாகம் முழுவதும் சுத்தமாக பராமரிக்கவும் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தவும் சுழற்சி முறையில் தேவையான எண்ணிக்கையில் சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும். பழனி நகராட்சி பகுதி முழுவதும் பழநி பேருந்து நிலையம், திருக்கோயில் வளாகம், மாநாட்டு வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும். மாநாட்டிற்கு வருகை தரும் மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென 11 இருக்க வசதி கொண்ட 5 பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்திட வேண்டும்.
மாநாட்டிற்கு வருகை தரும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு கல்லுாரி வளாகத்தில் பிரதான மாநாடு பந்தல் அமையவுள்ள இடமான மைதானத்தின் அருகிலேயே 200 எண்ணிக்கையிலான வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாகவும், கல்லுாரி வளாகத்தில் பின்புறம் கிழக்கு பகுதியில் 900 எண்ணிக்கையிலான இதர வாகனங்கள் நிறுத்தம் செய்யும் வகையிலும் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும்.
முக்கிய பிரமுகர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் தங்குவதற்கு உரிய விடுதி வசதியினை ஏற்படுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநாடு தொடர்பாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ள காவல் துறையினர் திட்டம் தயார் செய்து, போதுமான அளவில் காவலர்கள் மற்றும் பெண் காவலர்களை பணியமர்த்திட வேண்டும். பக்தர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களின் வாகனங்கள் உரிய வகையில் போக்குவரத்து சிரமமின்றி வந்து செல்வதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும், பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மாநாட்டு வளாகத்தில் தற்காலிக புறநகர் காவல்நிலையம் அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் உதவி மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்திட வேண்டும். மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி டிரோன் கேமராக்கள் பறப்பதை தடை செய்திட வேண்டும்.
மாநாடு நடைபெறும் இடம் மற்றும் பழனி திருக்கோயில் கிரிவலப்பாதை உள்ள இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாம்கள் அமைத்து போதுமான மருத்துவ அலுவலர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தயார்நிலையில் வைத்திட வேண்டும்.
மாநாடு நடைபெறும் இடம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடங்கள், மாநாட்டிற்கு வரும் பக்தர்கள் குளிக்கும் நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வாகனத்தை தயார்நிலையில் நிறுத்திட வேண்டும்.
மாநிலம் முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கிட போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநாடு நடைபெறும் இடம் மற்றும் முக்கிய பிரமுகர் தங்கும் இடங்களில் வழங்கப்படும் உணவுகளை சோதனை செய்து பாதுகாப்பான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஆன பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள் பயன்படுத்தாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாநாடு நடைபெறுவதையொட்டி 21.08.2024 முதல் 25.08.2024 வரை தடையற்ற மின் விநியோகம், திருக்கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் எவ்வித இடையூறுமின்றி மின் விநியோகம் செய்திட வேண்டும்.
பழனி மாநாடு நடைபெறும் இடத்திற்கு தேவையான இணையதள வசதிகள், பேக்ஸ் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். அவசர கால தொடர்புகளுக்கு தேவையான தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு.செ.மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைக்குமார், அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.