அரசு மரியாதை – உடல் உறுப்பு தானம் – ஒட்டன்சத்திரம்
செ.வெ.எண்:-48/2026
நாள்:-18.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
வாகனத்தில் செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தை சேர்ந்த திரு.நாட்டுத்துரை என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு.நாட்டுத்துரை வயது (35) என்பவர் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தில் உள்ள மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. விபத்தில் ஒருவர் மரணம் அடைந்த துயரச் சூழலில் அவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் அவருடைய குடும்பத்தினரின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தை சேர்ந்த கவுண்டப்பன் மகன் திரு.நாட்டுத்துரை வயது(35) என்பவர் அவருடைய டி.வி.எஸ் 50 வாகனத்தில் வடபருத்தியூர் காலனி அருகே செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். மேற்படி நபரை அரசு மருத்துவமனைக்கு கிசிச்சைக்கு கொண்டு சென்ற பொழுது இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேற்படி குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது.
பின்னர், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் திரு.நாட்டுத்துரை உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மதியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.