இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
செ.வெ.எண்:-65/2024
நாள்:-26.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.11.2024) நடைபெற்றது.
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 26.11.2024 அன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள். அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழியினை வாசிக்க அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
அதன்படி, ”சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யும், அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்” என அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.