மூடு

இரசாயன வர்ணம் பூசப்படாத சிலைகளை தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைத்து, விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடிட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 06/09/2024

செ.வெ.எண்:-07/2024

நாள்:-04.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

இரசாயன வர்ணம் பூசப்படாத சிலைகளை தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைத்து, விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடிட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்(PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்தபொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம் எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்டஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தெரிவு இடங்கள் வருமாறு:-

திண்டுக்கல் பகுதி சிலைகளை திண்டுக்கல் கோட்டைக்குளத்திலும், நத்தம் பகுதி சிலைகளை அம்மன்குளத்திலும், வத்தலக்குண்டு பகுதி சிலைகளை கண்ணாப்பட்டி ஆற்றிலும், நிலக்கோட்டை பகுதி சிலைகளை அணைப்பட்டி வைகை ஆற்றிலும், பழனி பகுதி சிலைகளை சண்முகாநதியிலும், ஒட்டன்சத்திரம் பகுதி சிலைகளை தலைக்குத்துஅருவி நீர்நிலையிலும், கொடைக்கானல் பகுதி சிலைகளை டோபிகானல் நீர் நிலையிலும், வேடசந்தூர் பகுதி சிலைகளை குடகனாறு நீர்நிலையிலும், வடமதுரை பகுதி சிலைகளை நரிப்பாறை நீர் நிலையிலும், குஜிலியம்பாறை பகுதி சிலைகளை பங்களாமேடுகுளத்திலும், கன்னிவாடி பகுதி சிலைகளை மச்சகுளத்திலும், சின்னாளப்பட்டி பகுதி சிலைகளை தொம்மன்குளத்திலும், தாடிக்கொம்பு பகுதி சிலைகளை குடகனாற்றிலும், பட்டிவீரன்பட்டி பகுதி சிலைகளை மருதாநதிஅணையிலும், எரியோடு பகுதி சிலைகளை நந்தவனக்குளத்திலும், சாணார்பட்டி பகுதி சிலைகளை மதனக்குளத்திலும், ரெட்டியார்சத்திரம் பகுதி சிலைகளை மாங்கரைகுளத்திலும் கரைக்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் மேலே கூறப்பட்ட இடங்களில் மட்டுமே இரசாயன வர்ணம் பூசப்படாத சிலைகளை கரைக்கவும் விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.