“உலகம் உங்கள் கையில்” -திட்டம்
செ.வெ.எண்:-07/2026
நாள்: 05.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று (05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து,மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில இறுதி ஆண்டு பயிலும் 2321 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ,மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் இன்று(05.01.2026) சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் தகுதியான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க உத்தேசிக்கப்பட்டு, முதல் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 11 அரசு கல்லூரி மற்றும் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு 2321 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி நர்சிங் பள்ளி 44 மாணவர்களுக்கும், நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி 531 மாணவர்களுக்கும், திண்டுக்கல் எம்.வி.எம் முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி 686 மாணவர்களுக்கும், ரெட்டியார்சத்திரம் காய்கறிகளுக்கான சிறப்பு மையம் 46 மாணவர்களுக்கும், திண்டுக்கல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி 149 மாணவர்களுக்கும், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி 126 மாணவர்களுக்கும், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 189 மாணவர்களுக்கும், குஜிலியம்பாறை அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் 48 மாணவர்களுக்கும், கருவி பொறியியல் நிறுவனம் 36 மாணவர்களுக்கும், கொடைக்கானல் பெண்களுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 160 மாணவர்களுக்கும், ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 102 மாணவர்களுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி 204 மாணவர்களுக்கும் என மொத்தம் 2321 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் இறுதிக்குள் அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு சுமார் 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டுள்ளார்கள். குறிப்பாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 34 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களின் மூலமாக ஆண்டு 12 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல்,35 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ,மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள்,விவசாயிகள்,மாணவ,மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன்., இ.ஆ.ப, அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி., எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் திருமதி லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.