மூடு

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 01.11.2025-அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 01/11/2025

செ.வெ.எண்:-73/2025

நாள்:-30.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 01.11.2025-அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வரும் காலங்களில், தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு சலுகைகளைப் பெற்றிட தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்களது நில உடைமை விபரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு தங்களது நில உடைமை ஆவணங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விவசாயிகளுக்கான அடையாள எண் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

இந்த அடையாள எண் பெறாதவர்கள் விவசாயிகளாக கருதப்படமாட்டார்கள் என்பதால் எதிர்வரும் காலங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டப் பயன்களை பெற்றிட இயலாது.

எனவே, வேளாண் அடுக்கக வலைதளத்தில் இதுநாள் வரை நிலஉடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை ஆதார் எண், கைபேசி எண், நில ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் கவனத்திற்கு :

எதிர்வரும் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. அச்சமயம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் நாளது வரை நிலஉடமைகளைப் பதிவு செய்யாத விவசாயிகள் அப்பதிவினை மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் நில உடைமை விபரங்கள் (சிட்டா, அடங்கல்) ஆதார் எண் மற்றும் நடப்பு கைப்பேசி எண்ணுடன் முகாமில் கலந்து கொண்டு, முகாமில் கலந்து கொள்ளும் வேளாண்மை மற்றும் சகோதரத்துறையினரை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.