ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் 2021-25 ஆண்டில் இதுவரை மொத்தம் ரூ.3,633.17 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
செ.வெ.எண்:-54/2024
நாள்:-20.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் 2021-25 ஆண்டில் இதுவரை மொத்தம் ரூ.3,633.17 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தரத்தை அக்குழுக்களுக்கு வழங்கப்படும் குழு ஊக்குநர், பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பயிற்சியின் மூலம் மகளிர் திட்டமானது உறுதி செய்கிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:-
ஏழைகள் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடத்தில் சிறப்பு கவனம் செலுத்துதல், விடுபட்ட ஏழை மக்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுவில் ஒருங்கிணைத்தல், சமுதாயம் சார்ந்த நிறுவனங்களை வலுப்படுத்துதல், திறன் வளர்ப்புப் பயிற்சிகளின் மூலம் சமூக மேம்பாடு அடையச் செய்தல், சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களின் தரத்தினை மேம்படுத்தி சந்தைப்படுத்துதலை எளிதாக்குதல், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல், ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், அரசுத்துறைகள் மூலம் கிடைக்க பெறும் பல்வேறு நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை ஒருங்கிணைத்து திறம்பட பயன்படுத்திட வழிவகை செய்தல், கிராமப்புற ஏழை மக்கள் அனைவரும் அடிப்படை வசதிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குதல், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:-
சுய வேலைவாய்ப்பு திட்டம் (தனிநபர்) (SEP-I): வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய தனிநபர்கள் தொழில் தொடங்கிட மற்றும் சாலையோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மேம்படுத்த வங்கிகளில் இருந்து ஒரு நபருக்கு குறைந்தது ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 இலட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. வங்கிகளில் 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கப்படும் இனங்களில் 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டி தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
சுய வேலைவாய்ப்பு திட்டம் (குழு) (SEP-G): இத்திட்டத்தின் மூலம் ஆர்வமுள்ள ஏழை, எளிய மக்கள் குழுக்களாக தொழில் தொடங்கிட மற்றும் வங்கிகளிலிருந்து ஒரு குழுவிற்கு குறைந்தது ரூ.1.50 இலட்சம் முதல் ரூ.10.00 இலட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கப்படும் இனங்களில் 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டி தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களை மகளிர் சுய உதவிக்குழுவில் இணைத்து அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதோடு வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடன் உதவிகளையும் பெற்றுக்கொடுத்து வருமானத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள், ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் மொத்தம் 9,640 குழுக்களில் 1,13,611 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திண்டுக்கல் மாநகராட்சியில் 1,598 குழுக்களில் 18,672 உறுப்பினர்களும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 197 குழுக்களில் 2,302 உறுப்பினர்களும், கொடைக்கானல் நகராட்சியில் 311 குழுக்களில் 3,634 உறுப்பினர்களும், பழனி நகராட்சியில் 388 குழுக்களில் 4,534 உறுப்பினர்களும் உள்ளனர். அதேபோல் 23 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 1,470 குழுக்களில் 17,176 உறுப்பினர்கள் உள்ளனர். ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் ஊரக பகுதிகளில் 9,640 குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 3,964 குழுக்களும் என மொத்தம் 13,604 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, 1,59,929 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வங்கி கடன் இணைப்பாக 2021-25 ஆம் ஆண்டில் 52,660 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2,807.05 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் வங்கி கடன் இணைப்பாக 2021-25 ஆம் ஆண்டில் 8,673 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.479.62 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
2021-25 ஆம் ஆண்டில் 919 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.15.2 கோடி சுழல் நிதி, 3,242 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.346.5 கோடி சமுதாய முதலீட்டு நிதி, 99 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2.275 கோடி நலிவு நிலை குறைப்பு நிதி வழங்கப்பட்டது.
2021-25 ஆம் ஆண்டிற்கு 13 கல்லூரி சந்தை படுத்துதல் நடைபெற்று, 403 சுய உதவிக்குழுக்களை பங்கேற்க செய்து, ரூ.2.21 கோடி மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-25 ஆம் ஆண்டில் இதுவரை ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.3,633.17 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.