மூடு

கடன் வசதியாக்கல் முகாமில் 87 தொழில் முனைவோர்களுக்கு ரூ.42.72 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2024
.

செ.வெ.எண்:-66/2024

நாள்:26.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

கடன் வசதியாக்கல் முகாமில் 87 தொழில் முனைவோர்களுக்கு ரூ.42.72 கோடி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(26.09.2024) நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தொழில் துவங்குவதற்கு தேவையான கடன் வசதிகளை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி கொடுப்பதுவே இம்முகாமின் முக்கிய நோக்கமாகும். திண்டுக்கல் மாவட்டத்தின் பொருளாதாரம் உயர்வடைவது வங்கியாளர்களாகிய வங்கி மேலாளர்கள் வசம் உள்ளது. ஆகவே தொழில் முனைவோர்கள் கடனுதவி கோரி வங்கி மேலாளர்களை அணுகும்போது அவர்களின் தேவை அறிந்து வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் அவர்கள் கடன் பெற்று தொழில் துவங்கிட ஆவன செய்திட வேண்டும்.

இந்நிதியாண்டிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கான கடன் இலக்கு ரூ.3,137.90 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு அரசிடமிருந்து ஆணைகள் பெறப்பட்டுள்ளது. 20.09.2024 வரை மொத்தம் 14,195 தொழில் முனைவோர்களுக்கு ரூ.2,333.48 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கீடு ரூ.804.42 கோடி தொகைக்கு உரிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடன் வழங்கி தொழில் அதிபர்களாக மாற்றி இந்நிதியாண்டு முடிவதற்கு முன்பாகவே இலக்கினை அடைந்திட வங்கி மேலாளர்கள் விரைந்து செயல்பட வேண்டும். இன்றைய முகாமில் 87 தொழில் முனைவோர்களுக்கு ரூ.42.72 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இம்முகாமில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. பூ.சு.கமலக்கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. க.அருணாச்சலம், திண்டுக்கல் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்க செயலாளர் திரு. ஜெயராமன், திண்டுக்கல் மாவட்ட தென்னை நார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்க செயலாளர் திரு.கே.மல்கர்சாயபு, திண்டுக்கல் மாவட்ட தொழில் மைய மேலாளர் (பொருளாதார புலனாய்வு) திரு. சு.நாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.