குடியரசு தினத்தை முன்னிட்டு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
செ.வெ.எண்:-59/2025
நாள்:-26.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
குடியரசு தினத்தை முன்னிட்டு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சி, எஸ்.புதூர் சமுதாயக்கூடத்தில் இன்று(26.01.2025) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொள்கிறார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
புதுக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனி நபர் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு, பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள், முன்னேற்றங்கள் குறித்து ஆரோசிக்கவும், கிராம சபைக் கூட்டங்கள், மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதுதவிர சில குறிப்பிட்ட பொருள்கள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கல் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-2025-ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம், கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிற பொருட்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
கிராமங்களுக்கு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது, அதில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, எத்தனை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆரம்ப இருப்பு எவ்வளவு, எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளன, மீதி எவ்வளவு தொகை உள்ளது, இன்னும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்பன போன்ற விவரங்களை இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம். இதை அறிந்துகொள்வது பொதுமக்களின் உரிமை. மேலும், கிராமத்தின் தேவை குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.
வறுமை ஒழிப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து, செய்திக்குறிப்புகள் வாயிலாகவும், பத்திரிகைகளின் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம். ஆனால் ஒரு கிராமத்தின் வரவு-செலவு என்ன என்பதை இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து கிராம வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி, காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர். துாய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(இணை இயக்குநர்) திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, வேளாண்மை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி ரெ.உமா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி கி.லீலாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மலரவன், திரு.மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.