மூடு

“குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்“ நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2024
.

செ.வெ.எண்:-27/2024

நாள்:-14.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

“குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்“ நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ”குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்” நிகழ்ச்சிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(14.11.2024) தொடங்கி வைத்தார்.

தேசிய குழந்தைகள் தினம் (நவம்பர் 14), சர்வதேச குழந்தைகள் தினம் (நவம்பர் 20) மற்றும் உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் (நவம்பர் 19) ஆகிய தினங்களை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று(14.11.2024) முதல் 20.11.2024-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர். அதன்படி, “நான் பாதுகாப்பான குழந்தைப்பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தை நேய செயல்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான, குழந்தைத் திருமணம், இளம் வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநின்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைத் தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக அக்குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுவேன். சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் சமத்துவமாக நடத்துவேன். பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதி செய்வேன். மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்திக்கொடுப்பேன். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வரும்பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பேன். நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது, நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று மனதார உறுதியளிக்கிறேன். குழந்தைநேய சமூகத்தை இணைந்து உருவாக்குவோம், உறுதிசெய்வோம்“ என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, “குழந்தைகளுக்கான நடை”(Walk for Children) என்ற தலைப்பில் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து அஞ்சலி பைபாஸ் வரை சென்று திரும்பி மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியின் முடிவில் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம் குறித்து “எதிர் காலத்தை கேளுங்கள்” என்னும் தலைப்பில் தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைதி அறக்கட்டளை தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தெய்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.பா.சத்தியநாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட ஆட்சியரின் தனி எழுத்தர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார், நன்னடத்தை அலுவலர் திரு.த.ஜோதிமணி, குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு.சேவியர் மற்றும் உறுப்பினர் திருமதி எலிசிபாய், சிறப்பு சிறார் காவல் பிரிவு, காவல் துறையினர், தொழிலாளர் நலத்துறையினர், கல்வித்துறையினர், சமூக நலத்துறையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியளார்கள், குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள், நேரு யுவகேந்திரா, தன்னார்வத் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.