கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

செ.வெ.எண்:-79/2025
நாள்:-29.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் இன்று(29.03.2025) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சி, பள்ளங்கி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனி நபர் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு, பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள், முன்னேற்றங்கள் குறித்து ஆரோசிக்கவும், குடியரசு தினம், சுதந்திர தினம், குடிநீர் தினம், உள்ளாட்சிகள் தினம், மே 1 ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதுதவிர சில குறிப்பிட்ட பொருள்கள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய தினம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அடுத்த ஆண்டு என்னென்ன பணிகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து கிராமசபைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, கலைஞர் கனவு இல்லம் 2025-2026 பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தில் இரண்டாவது ஆண்டாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 3500 வீடுகள் வரை எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு செய்து, ஒப்புதல் பெறுவது தொடர்பாக இன்றையக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்ட அனுமதி ஆணை வழங்கப்படும்.
உலக அளவில் தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது. சுத்தமான குடிநீரின் அளவு குறைந்து வருகிறது. எனவே, தண்ணீர் சேமிப்பு மற்றும் சிக்கனம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றம் காரணமாக அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கின் காரணமாக பயிர்கள் சேதமடைகின்றனது அல்லது குறைவான மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இன்றை சமுதாயத்திற்கும் சரி, அடுத்த தலைமுறையினருக்கும் சரி போதுமான அளவு சுத்தமான தண்ணீரை கொடுக்க வேண்டும் என்பதற்காக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 4 ஆண்டுகளாக சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு சார்பில் கிராமங்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட, அரசின் திட்டங்கள் அவர்களுக்கு கொண்டு போய் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்றவை வாயிலாக மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. பள்ளிக்கல்வியை முடித்த அனைத்து மாணவ, மாணவிகளையும் கல்லுாரியில் சேர்த்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் மலைப்பகுதி கிராமங்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து கிராம வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர். அதன்படி, ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும், நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தின் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழில்முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமைத் தொழில்முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்னும், நான் உளமார உறுதி கூறுகிறேன்” என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும், துாய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கிராமசபைக் கூட்டத்தில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ம.திருநாவுக்கரசு, உதவி இயக்குநர்(ஊராட்சி-பொ) திரு.கருப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பாலமுருகன், திரு.பிரபாராஜமாணிக்கம், கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.பாபு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.