சுகாதாரஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-68/2024
நாள்:-26.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
சுகாதாரஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.11.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் சுற்றுப் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பள்ளிகள், அங்கன்வாடி மையம் மற்றும் உணவு விடுதிகளில் அயோடின் உப்பு பயன்பாட்டினை உறுதி செய்ய சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தற்போழுது, வடகிழக்கு பருவமழை காலமாக இருப்பதால் வயிற்று போக்கு, டைய்பாய்டு, டெங்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்க மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சிகள் மூலம் தீவிர தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், உள்ளாட்சித்துறையின் மூலம் நீர் நிலைகள், மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்தல், பொதுமக்களுக்கு குளோரினேசன் செய்த பாதுகாப்பான குடிநீரை வழங்கவும், அனைத்து கர்ப்பிணிபெண்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி முறையாக மருத்துவ பரிசோதனைக்கு செல்லவும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து, மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதை தவிர்க்கவும், கர்ப்பிணிகளுக்கு ஏதேனும் மருந்து மற்றும் உணவில் ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவ அலுவலர்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் இதைப்பற்றிய விழிப்புணர்வு வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் இளம் வயது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கவும், கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது கர்ப்பத்தினை சுயமாக தாங்களே பதிவு செய்து RCH ID ஐ பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள், கருவுற்ற தாய்மார்கள் குறிப்பாக மகப்பேறு சம்மந்தமான சிகிச்சைகளுக்கும் மேலும், பொதுவான சிகிச்சைகளுக்கும் அங்கீகரிக்கப்படாத மருத்துவ சிகிச்சையினை வேறுயாரிடமும் எந்த இடத்திலும், எந்நேரத்திலும் எக்காரணம் கொண்டும் பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா. சேக்முகையதீன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சுகந்தி, இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பூமிநாதன், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.செல்வகுமார்(திண்டுக்கல்), மரு.அனிதா(பழனி), துணை இயக்குநர் (குடும்பநலத்துரை) மரு.கௌசல்யா, வருவாய்த்துறை, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.