மூடு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், சீவல்சரகு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/08/2025
.

செ.வெ.எண்:-67/2025

நாள்:-15.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், சீவல்சரகு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று(15.08.2025) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், சீவல்சரகு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

சீவல்சரகு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு, பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள், முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவும், கிராம சபைக் கூட்டங்கள், மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை தெரிவித்து கிராம வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ், 6 ஆண்டுகளில் 8 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டதில், சுமார் 85,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 6,200 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு சுமார் 4,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்திருந்தால் அவற்றை பழுது பார்க்கவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சுமார் 4,000 வீடுகளை சீரமைக்கவும், நடப்பு ஆண்டில் சுமார் 2,000 வீடுகளை சீரமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் முற்றிலும் சிதிலமடைந்து சீரமைக்க முடியாத அளவிற்கு பழுதடைந்த வீடுகளை மறு கட்டுமான திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் கட்டுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 25,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 500 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4.5 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், 1.5 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அன்புக்கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பெற்றோரை இழந்து பராமரிப்பு இன்றி தவிக்கும் குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தைகளை பராமரித்து, கல்வி பயில வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முகாமில் துறை அலுவலர்கள் பலர் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நெகிழி பொருட்கள் பயன்பாடு தவிர்ப்பு தொடர்பான உறுதிமொழி, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், துாய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி, நெசவாளர்களை கௌரவித்து, மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.5.50 இலட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதியை வழங்கினார்.

இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கரோலின், ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.முருகன், செல்வி பத்மாவதி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.