தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
செ.வெ.எண்: 67/2026
நாள்: 23.01.2026
திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (23.01.2026) நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் மூலம் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் படித்த இளைஞர்களுக்கு அரசுத்துறையிலும் மற்றும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பினை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதன் பேரில் இன்றைக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களை பணியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டதன் பேரில், திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 13.12.2025-அன்று 4-வது வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடத்தப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாம்களின் வாயிலாக தற்போது பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பை இளைஞர்கள் பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 120-க்கும் மேற்பட்ட நபர்கள் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, 2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-IV தேர்வில் 5 நபர்களும் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில் 4 நபர்களும் வெற்றி பெற்று அரசுப் பணியில் உள்ளனர். மேலும், 2025-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-IV தேர்வில் 6 நபர்களும், தொகுதி-II/IIA தேர்வில் முதல்நிலைத் தேர்வில் ((Prelims) 6 நபர்களும் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வில் 25 நபர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், தற்போது இவ்வலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான 2,000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட பிரத்தியேக நூலகம் செயல்பாட்டில் உள்ளது. போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பிற்கென (www.tnprivatejobs.gov.in) எனும் இணையதளம் மற்றும் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு ஆர்வலர்கள் பயனடையும் வகையில் மெய்நிகர் கற்றல் இணையதளம் (www.tamilnaducareerservices.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் 20 தனியார்துறை நிறுவனங்களும் 126 வேலைநாடுநர்களும் மற்றும் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை படித்த இளைஞர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் இலவசப் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் இப்பயிற்சி வகுப்புகள் குறித்து போட்டித் தேர்வு ஆர்வலர்களிடம் எடுத்துரைத்து அவர்களையும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வெற்றி பெற வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 33 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இம்முகாமில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் திரு.த.அருண்நேரு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.ராப்சன் டேவிட் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
