தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சியுடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
செ.வெ.எண்:-101/2025
நாள்:-25.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சியுடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ”தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்” என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு 2025-26 ஆண்டில் செயல்படுத்த அரசு ஆணை எண்.51, கு.சி.ந.. துறை நாள் 25.08.2025 மூலம் ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வசித்து வரும் 18 வயது முதல் 55 வயது குட்பட்ட மகளிர் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களை துவங்க அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை 25% மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம்) வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்கலாம். பயனாளியின் சொந்த முதலீடாக திட்ட மதிப்பில் 5 சதவீதம் செலுத்தி 95 சதவீதம் வங்கிக்கடனாக பெற்றுக்கொள்ளலாம். பயனாளிகள் வங்கிக்கு பிணையம் வழங்க தேவையில்லை.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கியில் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட மகளிருக்கு 3 நாள் தொழில் முனைவோர் பயிற்சியும், தேவையின் அடிப்படையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் திறன் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற விரும்பும் மகளிர் தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வித்தகுதி மற்றும் வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறலாம். கலைஞர் வினைத்திட்டத்தில்(KKT) பயன் பெற்ற மகளிர் பயனாளிகள் தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கு இத்திட்டத்தில் மீண்டும் விண்ணப்பித்து பயன் பெறலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, விலைப்புள்ளி பட்டியல் (ஜிஎஸ்டி எண்ணுடன்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு பிரிவினர் எனில் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவுடன் ஏற்புடைய வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும். வங்கியின் கடன் ஒப்புதல் பெற்ற பின்பு தொழில்முனைவோர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு, பயிற்சி முடிந்தவுடன் அதற்கான சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து கடன் பட்டுவாடா பெறலாம். வங்கியில் கடன் பட்டுவாடா செய்யப்பட்டவுடன் பயனாளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படும்.
எனவே, இந்த அரிய வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்ட மகளிர் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.