மூடு

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 25,235 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, 2,21,529 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025

செ.வெ.எண்:-116/2025

நாள்: 29.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 25,235 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, 2,21,529 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின்கீழ் ரூ.4532.73 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்களில் பயனடைந்த மகளிர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் துயரை துடைக்க, பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரிய திட்டங்களினாலும், செயல்பாடுகளினாலும் தமிழ்நாடு அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. பிரதிபலன் எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாகவும், வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், மதிப்பிற்குரிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தரத்தை உயர்த்திடும் வகையில் அக்குழுக்களுக்கு வழங்கப்படும் குழு ஊக்குநர், பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பயிற்சியின் மூலம் மகளிர் திட்டமானது உறுதி செய்கிறது. இந்த பயிற்சியானது மகளிருடைய வாழ்க்கையில் தரமான மாற்றத்தையும் நல்ல முறையில் குழுக்களை நடத்துவதற்கு உறுதி செய்கிறது.

ஏழைகள் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடத்தில் சிறப்பு கவனம் செலுத்துதல், விடுபட்ட ஏழை மக்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுவில் ஒருங்கிணைத்தல், சமுதாயம் சார்ந்த நிறுவனங்களை வலுப்படுத்துதல், திறன் வளர்ப்புப் பயிற்சிகளின் மூலம் சமூக மேம்பாடு அடையச் செய்தல், சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களின் தரத்தினை மேம்படுத்தி சந்தைப்படுத்துதலை எளிதாக்குதல், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல், ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், அரசுத்துறைகள் மூலம் கிடைக்க பெறும் பல்வேறு நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை ஒருங்கிணைத்து திறம்பட பயன்படுத்திட வழிவகை செய்தல், கிராமப்புற ஏழை மக்கள் அனைவரும் அடிப்படை வசதிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குதல், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சுய வேலைவாய்ப்பு திட்டம் (தனிநபர்) (SEP-I): வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய தனிநபர்கள் தொழில் தொடங்கிட மற்றும் சாலையோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மேம்படுத்த வங்கிகளில் இருந்து ஒரு நபருக்கு குறைந்தது ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 இலட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. வங்கிகளில் 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கப்படும் இனங்களில் 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டி தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

சுய வேலைவாய்ப்பு திட்டம் (குழு) (SEP-G): இத்திட்டத்தின் மூலம் ஆர்வமுள்ள ஏழை, எளிய மக்கள் குழுக்களாக தொழில் தொடங்கிட மற்றும் வங்கிகளிலிருந்து ஒரு குழுவிற்கு குறைந்தது ரூ.1.50 இலட்சம் முதல் ரூ.10.00 இலட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கப்படும் இனங்களில் 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டி தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களை மகளிர் சுய உதவிக்குழுவில் இணைத்து அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதோடு வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடன் உதவிகளையும் பெற்றுக்கொடுத்து வருமானத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 1,006 குழுக்களில் 10,821 உறுப்பினர்களும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 730 குழுக்களில் 7,523 உறுப்பினர்களும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 858 குழுக்களில் 9,474 உறுப்பினர்களும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 616 குழுக்களில் 6,751 உறுப்பினர்களும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 537 குழுக்களில் 5,627 உறுப்பினர்களும், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 11,169 குழுக்களில் 12,394 உறுப்பினர்களும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 745 குழுக்களில் 7,645 உறுப்பினர்களும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 888 குழுக்களில் 9,662 உறுப்பினர்களும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 773 குழுக்களில் 8,528 உறுப்பினர்களும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 658 குழுக்களில் 7,208 உறுப்பினர்களும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 747 குழுக்களில் 8,813 உறுப்பினர்களும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 659 குழுக்களில் 7,477 உறுப்பினர்களும், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 676 குழுக்களில் 7,880 உறுப்பினர்களும், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 738 குழுக்களில் 8,158 உறுப்பினர்களும் என ஊரகப் பகுதிகளில் மொத்தம் 20,800 குழுக்களில் 1,17,961 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திண்டுக்கல் மாநகராட்சியில் 1,790 குழுக்களில் 17,474 உறுப்பினர்களும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 221 குழுக்களில் 2,274 உறுப்பினர்களும், கொடைக்கானல் நகராட்சியில் 325 குழுக்களில் 3,345 உறுப்பினர்களும், பழனி நகராட்சியில் 420 குழுக்களில் 4,322 உறுப்பினர்களும் உள்ளனர். அதேபோல் 23 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 1,679 குழுக்களில் 16,153 உறுப்பினர்கள் உள்ளனர். ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் ஊரக பகுதிகளில் 20,800 குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 4,435 குழுக்களும் என மொத்தம் 25,235 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, 2,21,529 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வங்கி கடன் இணைப்பாக 2021-25 ஆம் ஆண்டில் 53,402 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3511.32 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. நகர்ப்புற வாழ்வாதார இயகத்தில் வங்கி கடன் இணைப்பாக 2021-25 ஆம் ஆண்டில் 15,224 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.930.13 கோடி கடன் வழங்கப்படடது. 2021-25 ஆம் ஆண்டில் 910 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1.37 கோடி சுழல் நிதியும், 3,383 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.36.82 கோடி சமுதாய முதலீட்டு நிதியும், 182 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.0.225 கோடி நலிவுநிலை குறைப்பு நிதி வழங்கப்பட்டது. 2021-25 ஆம் ஆண்டிற்கு 20 கல்லூரி சந்தை படுத்துதல் நடைபெற்று, 403 சுய உதவிக்குழுக்களை பங்கேற்க செய்து ரூ.52.86 கோடி மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-25 ஆம் ஆண்டில் இதுவரை ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.4532.73 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பயன்பெற்ற குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், உள்ளியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருமதி கே.நாகஜோதி அவர்கள் தெரிவித்ததாவது:-

என் பெயர் நாகஜோதி, நான் உள்ளியக்கோட்டையில் வசித்து வருகிறேன். நான் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தேன். எனக்கு போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தேன்.

அதன் பிறகு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுய உதவிக்குழுவில் இணைந்து சேமிக்க தொடங்கி பின்னர் 6 மாதத்திற்கு பிறகு ஆதாரநிதி வழங்கினார்கள். அதில் உள்கடன் பெற்று சிறிய அளவில் காய்கறி வியாபாரம் நடத்தி வந்தேன். அதன் பிறகு சமுதாய முதலீட்டு நிதியின் மூலம் ரூ.25,000, சொந்த நிதியாக ரூ.25,000 மற்றும் வங்கி கடன் ரூ.1.00 இலட்சம் பெற்று காய்கறி மற்றும் பலசரக்கு வியாபாரம் செய்து தினசரி ரூ.750 முதல் ரூ.900 வரை வருமானம் பெற்று என்னுடைய குடும்ப வாழ்வாதாரம் உயர்த்துள்ளது. எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி வறுமையை போக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என திருமதி கே.நாகஜோதி அவர்கள் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பயன்பெற்ற நத்தம் ஊராட்சி ஒன்றியம், குடகிபட்டியை சேர்ந்த திருமதி ப.வீரம்மாள் அவர்கள் தெரிவித்ததாவது:-

என் பெயர் வீரம்மாள். நான் நத்தம் ஊராட்சி ஒன்றியம் குடகிப்பட்டியில் வசித்து வருகிறேன். நான் விவசாய கூலி வேலைகளும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தேன். எனது குடும்பம் நடத்துவதற்கு போதுமான வருமானம் கிடைக்க வில்லை. இதனால் நான் சிரமப்பட்டு வந்தேன். அதன்பிறகு பால் கறவை மாடு வாங்கி பால் பண்ணையில் ஊற்றி வருமானத்தை உயர்த்திக்கொள்ள எனக்கு எண்ணம் ஏற்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பௌர்ணமி மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து சேமிக்க தொடங்கினேன். பின்னர், ஆறு மாதத்திற்கு பிறகு ஆதார நிதி வழங்கினார்கள். அதில் உள் கடன் பெற்று 2 ஆடுகள் வாங்கினேன். அதன் பிறகு மாடுவளர்ப்பு திட்டத்தின்கீழ் சமுதாய முதலீட்டு நிதியின் மூலம் ரூ.25,000, சொந்த நிதியாக ரூ.25,000 மற்றும் வங்கி கடன் ரூ.1.00 இலட்சம் பெற்று 2 பால் கறவை மாடுகள் வாங்கினேன். அதை தொடர்ந்து, பால் பண்ணைக்கு பால் ஊற்றி அதன் வழியாக தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை வருமானம் எனக்கு கிடைத்தது. இதன் மூலம் எனது குடும்ப செலவுகளை சமாளித்து கொள்கிறேன். அது மட்டும் இல்லாமல் எனது குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தேன். என் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். இப்போது நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம். இத்திட்டத்தின் மூலம் எங்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திய வாழ்வாதார இயக்கத்திற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என திருமதி ப.வீரம்மாள் அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.