மூடு

திண்டுக்கல் ஒன்றியம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு ஊக்கத்தொகையானது நடப்பு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 28/01/2025

செ.வெ.எண்:-61/2025

நாள்:-27.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் ஒன்றியம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு ஊக்கத்தொகையானது நடப்பு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தற்பொழுது நாளொன்றுக்கு சராசரியாக 87,424 லிட்டர் பால், கிராம அளவில் 174 சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 27,500 லிட்டர் பால் திண்டுக்கல் மாவட்ட மக்களின் தேவைக்காக, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள பால் 59,500 லிட்டர் மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய பிற ஒன்றியங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் ஒன்றியம் தொடர்ந்து இலாபகரமாக செயல்பட்டு வருவதால், ஒன்றியத்தின் இலாபத்திலிருந்து பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு ஊக்கத்தொகையானது நடப்பு ஜனவரி மற்றும் பிப்ரவரி 2025-ஆம் மாதங்களுக்கு மட்டும் (Patronage Incentive) வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024-2025-ஆம் ஆண்டின் ஒன்றிய உத்தேச நிகர இலாபத் தொகையிலிருந்து ஆதரவு தள்ளுபடி தொகையாக ரூ.34,31,000 (ஜனவரி மற்றும் பிப்ரவரி 2025 ஆகிய மாதங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவிற்கு) ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 174 சங்கங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பால் கிரையத்தொகையுடன் சேர்த்து ஆதரவு ஊக்கத்தொகை வழங்கப்படும், என திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்(லிட்) பொது மேலாளர் மரு.கே.வாணீஸ்வரி தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.