மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 75 திறன் பயிற்சி பள்ளிகள் 1500 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், திறன் பயிற்சி பள்ளிகள் மூன்று கட்டங்களாக வருகின்ற 20.11.2015, 01.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய நாட்

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2025

செ.வெ.எண்:-105/2025

நாள்:-26.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 75 திறன் பயிற்சி பள்ளிகள் 1500 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், திறன் பயிற்சி பள்ளிகள் மூன்று கட்டங்களாக வருகின்ற 20.11.2015, 01.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய நாட்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, கிராமப்புற பெண்கள், இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, 2025-26 ஆம் ஆண்டில் கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு, பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளும் 42,000 இளைஞர்களுக்கு வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய திறன் பயிற்சி திட்டங்களின் மற்றுமொரு முயற்சியாக சமுதாய திறன் பயிற்சி பள்ளி (Community Skill School) எனும் புதிய அணுகுமுறையுடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் என்பது, உள்ளூர் அனுபவமிக்க நிபுணர்களையே முதன்மை பயிற்றுநர்களாக கொண்டு, தங்கள் சொந்த கிராமங்களில் உள்ள சமுதாய உறுப்பினர்களுக்கு தங்கள் கள அறிவை நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் முறையாகும். இத்தகைய சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக, கொத்தனார், எலக்ட்ரீசியன், இருசக்கர வாகன பழுது பார்ப்பு, ஏ.சி மெக்கானிக், ஆரி எம்ராய்டரி, வாகன ஓட்டுநர் உரிமம், சூரிய ஒளி பலகை நிறுவுதல், அழகு நிலைய மேலாண்மை போன்ற 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில், மாநிலம் முழுவதும் 2,500 சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக 50,000 பயனாளிகளுக்கு CSS மூலம் ரூ.25 கோடி செலவினத்தில் பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது.

கிராமப்புற மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் குடும்பத்தை சேர்ந்த 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் இருப்பாலர்களும் பயன்பெறும் வகையில் உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் செயல்படுத்துவதற்கான திருத்தப்பட்ட கூடுதல் வழிமுறைகளின்படி, 10.11.2025 அன்று அனைத்து மாவட்டங்களிலும் 74 திறன் பயிற்சி பள்ளிகள் 1,420 உறுப்பினர்களுடன் துவக்கப்பட்டதை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திருமதி. ஆர்.வி. சஜீவனா. இ.ஆ.ப., அவர்களால் காணொளி வாயிலாக திட்ட அலுவலர்கள், பணியாளர்கள், பயிற்றுநர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருடன் நேரடியாக கலந்துரையாடி ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 75 திறன் பயிற்சி பள்ளிகள் 1500 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்டுள்ளது. இத்தகைய திறன் பயிற்சி பள்ளிகள் மூன்று கட்டங்களாக வரும் 20.11.2015, 01.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய நாட்களில் துவங்கப்பட்டு விரிவுபடுத்தப்பட உள்ளது.

இலவசமாக, உள்ளூரிலேயே, குறுகிய காலத்தில், பகுதி நேரமாக வழங்கப்படும் இத்தகைய திறன் பயிற்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பயனாளிகள், அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.