மூடு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2024
.

செ.வெ.எண்:-45/2024

நாள்:-21.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.06.2024) நடைபெற்றது.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க ரூ.50,000 மானியமாக வழங்கப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,500 வழங்கப்படுகிறது. தகுதியானவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வீட்டுமனைப் பட்டா உள்ளவர்களுக்கு இலவச வீடு உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து, மாநில மற்றும் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் இன்று(21.06.2024) நடைபெற்றது. இன்றைய முகாமில் குடும்ப அட்டை கோரி 24 விண்ணப்பங்கள், ஆயுஷ்மான் பாரத் அட்டை கோரி 45 விண்ணப்பங்கள், வாக்காளர் அடையாள அட்டை கோரி 22 விண்ணப்பங்கள், ஆதார் அட்டை கோரி 22 விண்ணப்பங்கள், முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு அட்டை கோரி 4 விண்ணப்பங்கள், மாநில அடையாள அட்டை கோரி 22 விண்ணப்பங்கள், தேசிய அடையாள அட்டை கோரி 13 விண்ணப்பங்கள் என மொத்தம் 152 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இணையதளம் வாயிலாக அலுவலர்கள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 5 திருநங்கைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திருநங்கைகள்(மூன்றாம் பாலினத்தவர்) 222 பேர் உள்ளனர். திருநங்கைகள் தங்களின் தேவைகள் குறித்து கோரிக்கை மனு அளித்தால் நிறைவேற்றித்தரப்படும்.

ஆதார் அட்டை, குடும்ப அட்டை உட்பட அரசின் பிற திட்டங்கள் தேவை குறித்து மனு அளித்தால் முன்னுரிமை அளித்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இம்முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் திரு.கோ.புஷ்பகலா, தேர்தல் வட்டாட்சியர் திரு.சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.