மூடு

திருநங்கைகள் தினத்தில் கலைத்திறமைகளை வெளிக்காட்டி திருநங்கைகள் உற்சாகம் திறமைகளை வெளிக்காட்ட களம் அமைத்துக் கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025
.

செ.வெ.எண்:-57/2025

நாள்:-19.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

திருநங்கைகள் தினத்தில் கலைத்திறமைகளை வெளிக்காட்டி திருநங்கைகள் உற்சாகம் திறமைகளை வெளிக்காட்ட களம் அமைத்துக் கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் துயரை துடைக்க, பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.

பெண்களைப் போல மூன்றாம் பாலினத்தவரையும் சமுதாயம் மதிக்கும் வகையில், அவர்களை கண்ணியத்துடன் அழைக்க வேண்டும் என்னும் எண்ணத்தின் வெளிப்பாடாக “திருநங்கை” என்ற மரியாதைக்குரிய சொல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அங்கீகாரத்தை வழங்கி அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் நல வாரியம் 15.04.2008-ல் சமூக நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இந்நல வாரியமானது 02.04.2025 அன்று திருத்தியமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருநங்கைகள் நல வாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, மருத்துவக் காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்து பயிற்சி அளித்தல், தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் ஓய்வூதியத் தொகை, திருநங்கைகள் உயர்கல்வி படிக்க கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் மற்றொரு முயற்சியாக, திருநங்கைகள் சமூகத்தின் கல்வி மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையிலும், உயர்கல்வி கற்கும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 ஊக்கத் தொகை இனி திருநங்கையர்களுக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்யும் நோக்கில், முதற்கட்டமாக சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் திருநங்கையினரை பணியமர்த்த தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. இந்த முன்முயற்சிகள் திருநங்கைகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதிலும், அவர்களுக்கு சமூகத்தில் சமமான அங்கீகாரம் கிடைப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

சமூகத்திற்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறையை நீக்குவதற்கும், சமூகத்தில் ஒரு உறுப்பினராக அவர்களை ஏற்றுக்கொள்வதற்கும், திருநங்கைகளின் உரிமைகளை ஆதரிக்கும் ஒருபகுதியாக ஏப்ரல் 15ம் தேதியை மாநில அளவிலான திருநங்கைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவர்களை சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக அங்கீகரித்து சிறப்பிக்கும் விதமாகவும் 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் “சிறந்த திருநங்கை விருது” வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது திருநங்கைகளின் நலனுக்காக அயராது பாடுபட்டு. சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதாளருக்கு, திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளில் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த விருதினைப் பெறுபவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலையும். அவர்களது சேவை மற்றும் சாதனைகளைப் பாராட்டும் விதமாக சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த விருதானது திருநங்கை சமூகத்தின் உன்னதமான சாதனைகளை அங்கீகரிப்பதோடு, அவர்களது முன்னேற்றப் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

திருநங்கைகளுக்கிடையே உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், திருநங்கைகள் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் திருநங்கைகளை வரவழைத்து அவர்களுக்கு போட்டிகள் நடத்திட தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் தினம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர்களுக்கு பேச்சுப் போட்டி, நடனம், பாட்டு மற்றும் பேஷன்ஷோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டி, நடனம், பாட்டு மற்றும் பேஷன்ஷோ திருநங்கைகள் கலந்துகொண்டு ஒய்யார நடை நடந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தொழில் முனைவோராக உள்ள திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை மூலம் திருநங்கைகள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருநங்கைகள், தங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசு சார்பில் நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என கூறி நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் சோலைஹால் பகுதியைச் சேர்ந்த திருநங்கை அல்லி தெரிவித்ததாவது:-

நாங்களும் மற்றவர்களைப் போல சமுதாயத்தில் ஒருவராகவே வாழ விரும்புகிறோம். தமிழக அரசு எங்களின் மீது தனிகவனம் செலுத்தி நாங்களும் சமூகத்தில் ஒரு அந்தஸ்தினை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல திட்டங்களை எங்களுக்கு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

திருநங்கைகள் அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, தொழிற் பயிற்சிகள், மானியத்துடன் தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. திருநங்கைகளின் பாதுகாப்பிற்காகவும், நலனுக்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கைகள் தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. எங்களுடைய ஆளுமை மற்றும் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டி, நடனம், பாட்டு மற்றும் பேஷன் ஷோ போன்ற போட்டிகள் எங்களுக்கு நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

எங்களுக்குள் உள்ள கலைத்திறமைகளை வெளிக்காட்ட இது எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். எங்களுக்காக அரசு சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அதில் நாங்கள் பங்கேற்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துடன், எங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் உணர்வுகளை மதித்து, எங்கள் கலைத் திறமைகளை வெளிக்காட்ட களம் அமைத்துக் கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.