மூடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தூய்மை காவலர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 17/10/2025
.

செ.வெ.எண்: 41/2025

நாள்: 16.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தூய்மை காவலர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;-

தமிழ்நாடு முழுவதும் 66 ஆயிரத்து 130 தூய்மை காவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். கிராமங்களில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் முழுமையான ஈடுபாட்டோடு தங்களுடைய பணியினை செய்வதால் மட்டுமே அனைத்து கிராமங்களும் ”நம்ம ஊரு சூப்பர்” என்ற நிலைக்கு உயர்ந்து கொண்டு வருகிறது. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தேவைப்படும் சாலை வசதிகள், வீடுகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் மூலம் தூய்மை காவலர்களின் மாத சம்பளம் ரூ.2,600-ஆக இருந்தததை தற்போது ரூ.5,000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

தூய்மைக் காவலர்களை தீபாவளி நன்னாளினை முன்னிட்டு சிறப்பிக்கும் வகையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை நாம் அனைவருக்கும் முக்கியமாகும். அதேபோன்று, தூய்மைக் காவலர்களாக சிறப்பாக பணியாற்றி வரும் உங்களிடம் தூய்மைக் காவலர் நலவாரிய அட்டை மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருப்பது மிக அவசியமாகும்.

தூய்மைக் காவலர் நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்லூரியில் சேர்ந்து படிக்கும் தாங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை போன்ற உதவித்தொகைகளை நலவாரிய அட்டையினை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும், உங்களுக்கோ அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதாவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது வாகனத்தில் செல்லும் போது விபத்திற்கு உள்ளானாலோ அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் போது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையினை காண்பித்து சேர்ப்பது மிக அவசியமாகும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையினை வைத்து சேர்ப்பதால் அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவச் செலவுகள் போது மீதமுள்ள தொகையினை கட்டினால் போதுமானதாகும்.

எனவே, தூய்மைக் காவலர் நலவாரிய அட்டை மற்றும் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெறவேண்டும். தூய்மைக் காவலர் நலவாரிய அட்டை வேண்டி விண்ணப்பித்த 700 நபர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கும் நலவாரிய அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மைக் காவலர்கள் பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு தள்ளு வண்டிகள், குப்பைகள் அள்ளுவதற்கான உபகரணங்கள், கையுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. குப்பைகளை அள்ளும்போது தாங்கள் கண்டிப்பான முறையில் கையுறையினை அணிந்து கொண்டுதான் பணிபுரிய வேண்டும். மேலும், தாங்களை செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் பணிக்கு யாரேனும் அழைத்தால் அப்பணியினை நிராகரிக்கலாம் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்கலாம்.

தூய்மைக் காவலர்களாக பணியாற்றி வருபவர்கள் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி மட்டுமே பணிபுரிய வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் கையுறை அணியாமல் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடக் கூடாது.

குடும்பத்திற்காக தூய்மைக் காவலர்களாக பணியாற்றி வரும் நீங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே நீண்டகாலம் இப்பணியினை சிறப்பாக செய்ய முடியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேடசந்தூர் ஊராட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) திரு.பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சரவணன், திருமதி முருகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.