தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா.
செ.வெ.எண்: 66/2026
நாள்: 23.01.2026
திண்டுக்கல் மாவட்டம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்,தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா
மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா இன்று (23.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முழுவதும் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 1986-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே நுகர்வோர்களை பாதுகாப்பதாகும். இதனடிப்படையில், நுகர்வோர்களை ஏமாற்றுவதிலிருந்து பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் டிசம்பர் 24-ஆம் தேதியை விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது பாதுகாப்பு உரிமை, தகவல் அறியும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, கேட்கப்படும் உரிமை, தீர்வு பெறும் உரிமை, நுகர்வோர் கல்வி உரிமை உள்ளிட்ட உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சட்டமாகும். எனவே, நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் இருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். வழக்கறிஞர்களின் துணையின்றி தாங்களாகவே நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடலாம்.
.
எனவே, நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது பொருட்களில் கலப்படம் உள்ளதா, காலவாதியான பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதனை உறுதி செய்து கொள்வது நம்முடைய உரிமையாகும். நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் குறித்த விழிப்புணர்வினை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்திலும் இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆகவே, பொருட்களை விற்பனை செய்யும் விற்பனைதாரர்கள் தாங்கள் நடத்தும் நிறுவனத்திற்கோ அல்லது கடைகளுக்கோ பொருட்களின் தரம் குறித்த அங்கீகாரச் சான்றிதழை பெற்றுள்ளார்களா என்பதனையும் உறுதி செய்திட வேண்டும். மாணவ, மாணவியர்கள் அனைவரும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல வேண்டியது நமது கடமையாகும் என்பதனை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நுகர்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளி, தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்.எஸ்.பி.சோலைநாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி, அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பான் சக்கர்ஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிறிஸ்துவ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஜி.டி.என்.கலைக்கல்லூரி, எம்.வி.எம்.அரசுக் கலைக்கல்லூரி, புனித அந்தோனியார் கல்லூரி, அருட்திரு ஜேக்கப் நினைவு கிறிஸ்துவ கல்லூரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.மொ.கு.அன்பழகன், திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.க.சிற்றரசு அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.