தைப் பொங்கலை முன்னிட்டு (2026) அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
செ.வெ.எண்:-32/2026
நாள்:-12.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வளாகத்தில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை இன்று (12.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், உழவுத்தொழில் ஆகியவற்றை கொண்டாடும் நினைவுகூரும் வகையில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி பண்டிகை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தைப்பொங்கலன்று சூரியனுக்கு பொங்கல் படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. உழவர் பெருமக்கள் விவசாயத்திற்கு உழைத்த மாடுகளை கொண்டாடும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. உறவினர்கள் வீட்டிற்கு சென்று அவர்களுடன் தானும் சேர்ந்து கொண்டு அனைவரும் ஒன்று கூடு கொண்டாடும் விழாவாக காணும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் தங்களுடைய துன்பங்களை மறந்து இன்பங்களை மட்டுமே கொண்டாடும் விழாவாக பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, மாடுகளை அலங்கரித்து, புதுப்பானையில் அரிசி, சர்க்கரை, நெய் சேர்த்துப் பொங்கலிட்டு தங்களுக்கு விவசாயத்திற்கு பாடுபட்ட மாடுகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழும் திருவிழாவே பொங்கல் திருநாள். இந்த நன்னாளினை சிறப்பாக கொண்டாடி மகிழ்வதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி, பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.தொடர்ச்சியாக, நாளை (13.01.2026) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ., அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.