மூடு

நத்தம் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2025

செ.வெ.எண்:-48/2025

நாள்:-16.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.04.2025) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வேலம்பட்டி ஊராட்சி சமுதாயக்கூடத்தில், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மாணவ, மாணவிகளிடம் காலை உணவு மற்றும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், உணவு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, மாணவ, மாணவிகளிடம் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத்திறன் குறித்தும், கற்றல் – கற்பித்தல் உபகரணங்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் சுத்தமாக உள்ளதா, கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், காலை உணவுத் திட்டத்தில் உணவுகளை மாணவர்களுக்கு தரமாக, சுகாதாரமானதாக தொடர்ந்து வழங்க வேண்டும், பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செந்துறையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில்(2024 – 2025) வீடுகள் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, செந்துறையில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செந்துறையில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது நுாலகக் கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செந்துறை அரசு உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவு தயார் செய்யும் பணிகள் மற்றும் மதிய உணவுக்கு வழங்கப்படும் முட்டை, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை பார்வையிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செந்துறை ஊராட்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர், செந்துறை ஊராட்சியில் தேனீ வளர்ப்பு பணியை ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, குடகிப்பட்டி ஊராட்சி, மனக்காட்டூரில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலைய கட்டடம், மணக்காட்டூர் நலவாழ்வு மையம் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குட்டுப்பட்டி ஊராட்சியில் ரூ.41.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர், சிறுகுடி ஊராட்சியில் வல்லமுத்துநாயக்கன் குளத்தில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களுக்கு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிறுகுடியில் அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், சிறுகுடியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக்கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, நத்தத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கான இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி, மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நத்தம் வருவாய் வட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்துத் துறைகள் சார்பில் துறை அலுவலர்களால் பல்வேறு இடங்களில் இன்று(16.04.2025) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, வேலம்பட்டி ஊராட்சி சமுதாயக்கூடத்தில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு, அலுவலர்களின் ஆய்வு அறிக்கையை பார்வையிட்டார். தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, பணிகளை நிறைவேற்றி அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். மேலும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டதை உறுதிப்படுத்திட வேண்டும், என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, நத்தம் வட்டாட்சியர் திரு.பாண்டியராஜன் மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.