பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, நடவு செய்தல் தொடர்பான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
செ.வெ.எண்: 50/2024
நாள்: 18.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, நடவு செய்தல் தொடர்பான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடவு செய்தல் தொடர்பான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(18.10.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ், காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவினை அதிகரிக்கும் செயல்பாடுகளை வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையுடன் இணைத்து செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில், திண்டுக்கல் சமூக காடுகள் வனத்துறை நாற்றாங்கால் மூலம் 2024-2025-ஆம் ஆண்டு முதல் 2026-2027 முடிய 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, அரசு புறம்போக்கு நிலங்கள், தனியார் மற்றும் தனியார் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து, வளர்த்தல் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட அளவிலான குழு மற்றும் வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் மற்றும் அலுவலர்களுக்கு, மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடவு செய்தல், மரக்கன்றுகள் நடவு செய்ய இடம் தேர்வு செய்தல், இந்த பணிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களை இந்த திட்டத்தில் ஈடுபடுத்துதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டம் தொடர்புடைய வட்டார அளவிலான குழுவினர், வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அலுவலர்கள் திட்டத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்து, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, திண்டுக்கல் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட வன அலுவலர் திரு.ராஜ்குமார், இ.வ.ப., மாவட்ட வன அலுவலர்(சமூக காடுகள் திட்டம்) திரு.மகேந்திரன், இ.வ.ப., செயற்பொறியாளர்(ஊ.வ.) திரு.சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வனவர்கள், வனசரகர்கள், உதவிப்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.