மூடு

பத்திரிகைச் செய்தி – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

வெளியிடப்பட்ட தேதி : 21/02/2025

செ.வெ.எண்:-55/2025

நாள்:-19.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகைச் செய்தி

அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு எண். 29035/2024, 29217/2024 மற்றும் 30354/2024 ஆகியவற்றில் 27.01.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்புரையின்படி, அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர், மத ரீதியான அமைப்புகள், சாதிய அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் மற்றும் பீடம் அமைத்து வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் ஆகியவற்றினை சம்பந்தப்பட்ட அமைப்பினர் 12 வார காலத்திற்குள் அகற்றிட வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 2 வார காலம் அவகாசம் வழங்கி கொடிக்கம்பம் அமைத்துள்ள அமைப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கி கொடிக்கம்பங்கள் அகற்ற நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதற்கான செலவுத் தொகையினை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் மூலம் கொடிக்கம்பங்கள் வைத்துள்ள அமைப்புகளிடமிருந்து வசூல் செய்யப்படும். மேலும், அரசு பொது இடங்களில் எந்தவொரு அமைப்பினருக்கும் புதிதாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி வழங்கப்படமாட்டாது. தங்களுக்கு சொந்தமான இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட அனுமதி கோரப்படும் நேர்வுகளில் அரசிடமிருந்து வரப்பெறும் வழிக்காட்டுதலின்படி கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அரசியல் கட்சி மற்றும் இதர அமைப்புகளால் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு உரிய அனுமதி பெற்று வைக்கப்பட வேண்டுமெனவும், நிகழ்ச்சி முடிவுற்ற பின்னர் தற்காலிக கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டத்தினால் சாலையில் ஏற்பட்ட பள்ளம் போன்ற பாதிப்புகளை சம்பந்தப்பட்ட அமைப்பினரே சரிசெய்ய வேண்டுமெனவும், தவறும்பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவை சரிசெய்யப்பட்டு அதற்கான தொகையும் சம்பந்தப்பட்ட அமைப்பினரிடமிருந்து வசூல் செய்ய வேண்டும்.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை நடைமுறைப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுலவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.