மூடு

பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 11/09/2025

செ.வெ.எண்:-36/2025

நாள்:-10.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வகையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பலதரப்பட்ட காய்கறி, பழங்கள் மற்றும் வேளாண் விளைபொருள் விளைவிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் அதிக அளவில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மகசூலினை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளால் நேரடியாக மண் வழியாகவும் மற்றும் செடிகளின் மீது தெளித்தும் பயன்படுத்தப்படுகிறது. இது மனிதர்களை மட்டுமின்றி மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளையும் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து உயிரினங்களும் பாதித்து, வாழ்வதற்கு தகுதியற்றதாக பூமியை மாற்றுகிறது. எனவே, விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ளும் போதும், பூச்சி மற்றும் நோய் மேலாண்மையின் போதும் கீழ்கண்ட அங்கக வேளாண்மை அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நில சீரமைப்பின்போது 1 எக்டருக்கு அசோஸ்பைரில்லம் 2கிலோ, பாஸ்போ பாக்டீரியா 2கிலோ, மண்புழு உரம் 2டன்கள், தொழு உரம் 25டன்கள் மற்றும் வேப்பம்பிண்ணாக்கு 500கிலோ போன்ற உரங்களை பயன்படுத்தி மண், நீர் மற்றும் காற்று மாசுபடுதலை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்தல், 3 சதவீத பஞ்சகாவ்யா, தசகாவ்யா, மீன் அமிலம் போன்ற இயற்கை இடுபொருளை நீரின் வழியாக அல்லது இலை வழியாக அளித்து தரமான பொருட்களை உற்பத்தி செய்தல்.

விதை நேர்த்தியின்போது 1 கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி @4கிராம், சூடோமோனாஸ் 10கிராம் என்ற அளவில் உபயோகித்தும், உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகளாகவும் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், பெசிடியோமைசிட்ஸ் போன்றவைகளை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துதல்.

பூச்சிகளை கவர்ந்து அழிக்கக்கூடிய மஞ்சள் மற்றும் நீலநிற ஒட்டுப் பொறிகள், விளக்குப்பொறி மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்துதல்.

பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உள்ள இரகங்களை தேர்வு செய்தல்.

பூச்சிகளை உணவாக்கும் உயிர்களை பயன்படுத்துதல். (இரை விழுங்கி மற்றும் ஒட்டுண்ணி)
பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க விதைக்கும் காலத்தை சரியாகத் திட்டமிடல் மற்றும் கோடை உழவு மேற்கொள்ளுதல்,
இயற்கை பூச்சிக் கொல்லிகளை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துதல்.

மேற்கூறிய உத்திகளை பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் நஞ்சில்லா வேளாண்மை பொருட்களை உற்பத்தி செய்து தரமான மற்றும் அதிக மகசூல் பெற்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக உணவுப் பாதுகாப்பினை பயனடையுமாறு உறுதிப்படுத்தி மனித ஆரோக்கியத்தில் பாதுகாப்புகளை முன்னிறுத்தி, நம்மை மட்டுமின்றி சுற்றுச்சூழலில் உள்ள நன்மைபயக்கும் உயிர்களின் வாழ்க்கைக்கு வழிகோலனுதல் அனைவரின் கடமையாகிறது. எனவே, அங்கக வேளாண்மையை உபயோகித்து மண் வளத்தை பாதுகாத்து விவசாயிகள் அனைவரும் அறிக மகசூல் பெற்று எதிர்கால சந்ததியினருக்கு இதே வளத்தை கொண்டு செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.