பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதியுள்ள மாணவ மாணவியர்கள் அனைவரையும் உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர் கல்வி வழிகாட்டல் நடவடிக்கைகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:- 15/2025
நாள்:05.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதியுள்ள மாணவ மாணவியர்கள் அனைவரையும் உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர் கல்வி வழிகாட்டல் நடவடிக்கைகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதியுள்ள மாணவ மாணவியர்கள் அனைவரையும் உயர் கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர் கல்வி வழிகாட்டல் நடவடிக்கைகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தேர்வெழுதிய மற்றும் தேர்வு எழுதாத 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “உயர்கல்வியை அறிவோம்” நிகழ்வின் வாயிலாக உயர்கல்வி குறித்து ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள காணொளிகளை மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகம் வாயிலாகவோ அல்லது மாணவர்களின் கைபேசி வாயிலாகவோ காண உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
போட்டித் தேர்வுகளுக்கு விருப்பமுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க உதவி செய்தல் வேண்டும் மற்றும் அவர்கள் விண்ணப்பித்த போட்டித் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்துதல் வேண்டும்.
தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் விருப்பமுள்ள மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ இணையதளம் வழியாக 59 இணையவழி சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விபரங்களை மாணவ/மாணவியர் அறிந்து கொள்ளச் செய்தல் வேண்டும்.
தலைமை ஆசிரியர் (தலைவர்), உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் (உறுப்பினர்), பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் (தலைவர், துணைத் தலைவர் மற்றும் கல்வியாளர்) & முன்னாள் மாணவர்கள் (தலைமை ஆசிரியர்களால் பரிந்துரைக்கப் படும் 5 நபர்கள்) ஆகியோரை உள்ளடக்கிய ‘உயர்கல்வி வழிகாட்டி குழு’ அமைக்கப்பட வேண்டும். இக்குழு உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை உயர்கல்வி வழிகாட்டி முகாமிற்கு வரவழைக்க வேண்டும். பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்விக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துத்த வேண்டும். உயர்கல்விக்கு விண்ணப்பிக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரிக் கனவு நிகழ்வு மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் தயார்நிலையில் உள்ளனவா? இல்லையா? என்பதனை கண்டறிந்து சான்றிதழ்கள் இல்லையெனில் அவற்றை இ-சேவை மையம் வாயிலாக மாணவர்கள் பெற சார்ந்த பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள் உதவி செய்தல் வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்களில் பள்ளியின் சார்பாக பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசுப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பங்குபெற்று பள்ளிகளில் நடைபெறும் உயர்கல்வி முகாமின் முக்கியத்துவம், சென்ற ஆண்டு உயர்கல்வி சேர்க்கை பெற்ற மாணவ/மாணவியர் விவரம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடத்துவது மிக முக்கிய செயல்பாடாகும். குறைந்த மதிப்பெண் எடுத்தவர் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர் என்று எந்த பாகுபாடுமின்றி, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவரையும் உயர்கல்விக்கு சேர்க்கைபெற வைப்பது நம் உயர்கல்வி வழிகாட்டி குழுவின் முக்கிய கடமையாகும். தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களை தொடர்பு கொண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க உரிய ஆலோசனைகள் வழங்கி உதவ வேண்டும்.
தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத/ தேர்ச்சி பெறாத / துணை தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்தும் ‘உயர்வுக்குப் படி’ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வீ.சங்கர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் திரு.க.செல்வராஜ், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.