மூடு

பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், 5,295 மனுக்கள் பெறப்பட்டதில், 3,270 நபர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. 229 நபர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 1,112 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

வெளியிடப்பட்ட தேதி : 20/12/2024
.

செ.வெ.எண்:-52/2024

நாள்:-19.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், 5,295 மனுக்கள் பெறப்பட்டதில், 3,270 நபர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. 229 நபர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 1,112 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

அரசு திட்டங்களின் கீழ் பயனடைந்துள்ள பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் துயரை துடைக்க, பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பளியர் இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் அவர்களை சென்றடைவதற்கு, பல்வேறு நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் பளியர் இன மக்கள், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 4 கிராமங்களில் 42 குடும்பங்களும், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 6 கிராமங்களில் 39 குடும்பங்களும், ஆத்தூர் வட்டத்தில் 1 கிராமத்தில் 2 குடும்பங்களும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 2 கிராமங்களில் 90 குடும்பங்களும், பழனி வட்டத்தில் 8 கிராமத்தில் 216 குடும்பங்களும், கொடைக்கானல் வட்டத்தில் 33 கிராமத்தில் 1,143 குடும்பங்களும் என மொத்தம் 1,532 குடும்பங்களை சார்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் அனைத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பளியர் இன மக்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து துணை ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் கேட்டறிந்து, பளியர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கும் ஒருங்கிணைத்து குழுக்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் 24.06.2024 அன்று முதல் 27.06.2024-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் விடுபடாமல் கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு முகாம்கள் வாயிலாக மொத்தம் 5,295 மனுக்கள் பெறப்பட்டதில், 3,270 நபர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. 229 நபர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. 1,112 மனுக்கள் விசாரணையில் உள்ளன, 684 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, சாதிச்சான்று கோரி 633 மனுக்கள் பெறப்பட்டதில், 570 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 63 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பழங்குடியினர் நலவாரிய அட்டை கோரி 481 மனுக்கள் பெறப்பட்டதில், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குடும்ப அட்டை கோரி 276 மனுக்கள் பெறப்பட்டதில், 251 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மருத்துவக் காப்பீடு அட்டை கோரி 459 மனுக்கள் பெறப்பட்டதில், 457 நபர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2 நபர்களின் மனுக்கள் விசாரணையில் உள்ளன.

வாரிசு சான்று கோரி 5 மனுக்கள் பெறப்பட்டதில், அனைவருக்கும் வாரிசு சான்று வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கோரி 9 மனுக்கள் பெறப்பட்டதில், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டன. முதியோர் உதவித்தொகை மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிற உதவித்தொகைகள் கோரி 13 மனுக்கள் பெறப்பட்டதில், அனைவருக்கும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. தாமத பிறப்பு மற்றும் இறப்பு சான்று கோரி 77 மனுக்கள் பெறப்பட்டதில், அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வங்கி கணக்கு தொடங்கிட 268 மனுக்கள் பெறப்பட்டதில், 267 நபர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டன. 1 நபரின் மனு விசாரணையில் உள்ளது. பிறப்புச் சான்றிதழ் கோரி 290 மனுக்கள் பெறப்பட்டதில், அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆதார் அட்டை கோரி 379 நபர்கள் விண்ணப்பித்ததில், 365 நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட்டன. 14 நபர்களின் மனு விசாரணையில் உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கோரி 336 மனுக்கள் பெறப்பட்டதில், 335 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டன. ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இலவச வீட்டுமனைப் பட்டா கோரி 359 மனுக்கள் பெறப்பட்டதில், 101 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டன, 43 நபர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பட்டா வழங்கப்படவுள்ளது. 123 மனுக்கள் விசாரணையில் உள்ளன, 92 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நில ஒப்படை கோரி 93 மனுக்கள் பெறப்பட்டதில், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. வனஉரிமைச் சான்று கோரி 505 மனுக்கள் பெறப்பட்டதில், 25 நபர்களுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளன. 134 நபர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு சான்று வழங்கப்படவுள்ளது, 27 மனுக்கள் விசாரணையில் உள்ளன, 319 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கலைஞரின் கனவு இல்லம் கோரி 298 மனுக்கள் பெறப்பட்டதில், 24 நபர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. 49 நபர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஆணைகள் வழங்கப்படவுள்ளன. 207 மனுக்கள் விசாரணையில் உள்ளன, 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொகுப்பு வீடு பராமரிப்பு திட்டத்தில் 394 மனுக்கள் பெறப்பட்டதில், அனைத்து மனுக்களும் விசாரணையில் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 83 மனுக்கள் பெறப்பட்டதில், 11 மனுக்கள் விசாரணையில் உள்ளன, 72 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதர திட்டங்களின் கீழ் 25 மனுக்களும், குடிநீர் பொது இணைப்பு கோரி 119 மனுக்களும்,, தெருவிளக்கு கோரி 25 மனுக்களும், சாலை மற்றும் பேருந்து வசதி கோரி 42 மனுக்களும், பேருந்து வசதி கோரி 5 மனுக்களும், நியாயவிலைக்கடை கோரி ஒரு மனுவும், தனிநபர் கழிப்பறை கோரி 73 மனுக்களும், பொதுசுகாதார கழிப்பறை வசதி கோரி 44 மனுக்களும், அங்கன்வாடி மையம் கோரி 2 மனுக்களும், ஆரம்ப சுகாதார நிலையம் வசதிகள் கோரி ஒரு மனுவும் பெறப்பட்டதில், தெருவிளக்கு கோரிய ஒரு மனுவும், சாலை வசதி கோரிய ஒரு மனுவும், அங்கன்வாடி மையம் கோரிய ஒரு மனுவும் ஏற்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படவுள்ளன. மற்ற மனுக்கள் விசாரணையில் உள்ளன.

சிறப்பு முகாம்கள் வாயிலாக அரசின் நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்த ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த திரு.வெள்ளையன்(30) அவர்கள் தெரிவித்ததாவது:-

நான் கூலித்தொழிலாளி. நாங்கள் வசிக்கும் கிராமம் பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ளது. அரசின் திட்டங்களை பெற வேண்டுமெனில் நாங்கள் தாலுகா ஆபீசுக்கும், கலெக்டர் ஆபிசுக்கும் போகனும். அதனால எங்களுக்கு அலைச்சல் அதிகம், ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் எங்களுக்கு வருமானம் இழப்பு ஏற்படும். இதனால் எங்களில் பலரிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, ஜாதிச்சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் சரிவர இருப்பது இல்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அதிகாரிகள் எங்கள் வீடு தேடி வந்து, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு தொடங்குதல், ஜாதி சான்றிதழ் போன்றவற்றை வழங்குவதற்காக முகாம் நடத்தி, எங்களிடம் விண்ணப்பங்கள் பெற்று நடவடிக்கை மேற்கொண்டனர். வருவாய் துறையின் சார்பில் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆணை, பிறப்பு இறப்பு சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் ஓய்வூதியம், பிற ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள், வங்கி சேமிப்பு கணக்கு, ஜாதி சான்றிதழ் போன்றவை உடனுக்குடன் வழங்கப்பட்டன.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் மனு அளித்ததில் எங்கள் குடும்பத்தினருக்கு ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, நலவாரிய அட்டை, பிறப்பு சான்றிதழ் போன்றவை கிடைத்துள்ளன. எங்களுக்கு வீடு கட்டி தருவதற்கும், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கும், நாங்கள் அரசின் நலத்திட்டங்கள் பெறவும் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.

ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இதுபோன்ற திட்டங்களை அறிவித்து, கடைக்கோடியில் வசிக்கும் எங்களைப்போன்ற ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

ஆண்டிப்பட்டி அருகே மண்திட்டு பகுதியைச் சேர்ந்த திருமதி இலட்சுமி(வயது 37) அவர்கள் தெரிவித்ததாவது:-

நான் காட்டு வேலைக்கு சென்று வருகிறேன். நாங்கள் ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசின் திட்டங்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களை தேடி அலைந்துதான் பெற வேண்டும். தற்போது, அதிகாரிகள் எங்கள் வீடு தேடி வந்து அரசின் திட்டங்களை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தினர். இதன்மூலம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஜாதி சான்றிதழ், நலவாரிய அட்டை, பட்டா ஆகியவை எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளன. ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி, வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.