பழனி தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-60/2025
நாள்:-27.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
பழனி தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் இன்று(27.01.2025) ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மரத்தேர் வெள்ளோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் தைப்பூசத் திருவிழாவினையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு, திருச்செந்தூர் சூரசம்ஹாரம், திருவண்ணாமலை தீபத்திருவிழா, ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, திருத்தணி ஆடிக்கிருத்திகை, பழனி தைப்பூசம், மற்றும் பங்குனி உத்திரம், மதுரை சித்திரை பெருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்ற பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுகின்ற திருவிழாக்களை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் முன்கூட்டியே அனைத்து துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடத்தி இறையன்பர்கள் எளிதில் தரிசனம் மேற்கொள்ளும் வகையிலும், அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கவுள்ள பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
கடந்தாண்டு தைப்பூசத் திருவிழாவில் சுமார் 12 இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தாண்டு அந்த எண்ணிக்கை கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வாறு வருகைதரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும், இறை தரிசனத்திற்கும், உணவு, தங்குமிடங்கள், பாதயாத்திரை வருகின்ற பக்தர்களுக்கான தங்கும் மண்டபங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்ற பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த அன்னதானம், 10,000 லிருந்து 20,000 என உயர்த்தப்பட்டு இருபது நாட்களுக்கு 4 இலட்சம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பழனி திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 6,000 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டியோடு, மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு ஏற்கனவே குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் உபகோயில்களில் 7 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, மீதமுள்ள 19 திருக்கோயில்களுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும். இதன்மூலம் பழனி திருக்கோயில் மற்றும் அதன் உபத்திருக்கோயில்களில் ஆகமவிதிப்படி முழுமையாக குடமுழுக்கு நடத்தி முடித்த ஆட்சியாக இந்த ஆட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும்.
பழனியில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வரப்பெற்ற புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஒரு கூட்டத்தினை நடத்திட உள்ளோம். பக்தர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் சாதாரண நாட்களில் வசூலித்த கட்டணங்களையே தைப்பூச விழாவின்போதும் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும், உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் உறுதி செய்யப்படும். மேலும், தனிநபர்கள் வழங்கும் அன்னதானத்தை வரவேற்பதோடு அவர்களும், பக்தர்களுக்கு எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாத வகையில் தரத்தோடு உணவினை தயார் செய்து வழங்கிட வேண்டும். பக்தர்களின் நலனும் முக்கியம் அதே போல் அன்னதானம் வழங்குவேன் என்று வருகின்றவர்களுக்கும் இந்த அரசு ஆதரவாக இருக்கும்.
கேட்டதை தந்து, கேளாததையும் தருகின்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தைப்பூசம் மற்றும் அதனையொட்டி வருகின்ற இரண்டு நாட்கள் என மொத்தம் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும். கடந்த ஆட்சியில் திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று அறிவித்தார்கள். அந்த ஆட்சி முடிகின்ற வரையில் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தான் 1,289 பணியாளர்கள் பணி வரன்முறை செய்து நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை குழுவில், கூடுதலாக 500 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டு, அவர்களும் விரைவில் பணிவரன்முறை செய்யப்பட உள்ளனர். நாதஸ்வரம் வாசிப்பவர்களையும் பணி நிரந்தரம் செய்வதற்கு தகுதிகள் இருந்தால் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பழனி திருக்கோயிலுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு சுமார் 3 இலட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. அப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தி அவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணியிடங்களை பெற்று தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தேனியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எல்லோருக்கும் எல்லாமுமான ஆட்சி நடத்தி வருகிறார். அவரவர் விரும்புகின்ற வகையில் அவர்களது மதவழிபாட்டினை அமைதியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்பதை கொள்கை மற்றும் இலட்சியங்களாக கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமைதி தவழுகின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். ஆகவே, காலங்காலமாக கடைபிடிக்கப்படும் வழிபாட்டுகளுக்குட்பட்டு நடைபெறுகின்ற செயல்களை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்கும். அதை மீறுகின்ற பட்சத்தில் நிச்சயமாக அதற்கு தடையாகவும் இருக்கும்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள 50 சென்ட் நிலம் தொடர்பாக 1930 ஆம் ஆண்டிலிருந்து இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. 1930 ல் லண்டன் பிரிவியூவில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதர வழக்குகளிலும் இதனை போன்று தான் தீர்ப்பு வந்துள்ளது. தற்போது ஒரு சில ஆதீனபெருமக்கள் இது சம்பந்தமாக ஒரு குழுவினை அமைத்து முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். இது சம்பந்தமாக தனிநபர் நீதிமன்றத்தையும் அணுகியுள்ளார். துறையின் அமைச்சர் என்ற முறையில் நான் தெரிவிக்கின்ற கருத்துக்களை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். இரு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் எவ்வித சிறு சச்சரவும் வந்துவிடக் கூடாது. சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து அனைவரும் சகோதரத்துவத்தோடு ஒற்றுமையாக பயணிக்கின்ற தமிழகத்தில் எவ்வித பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதில் ஊடகத்துறையை சேர்ந்த நண்பர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பபிறகு பழனி, இழுவை இரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை 32 லிருந்து 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழனி திருக்கோயிலின் பெருந்திட்ட வரைவிற்காக 58 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வியாபார பெருமக்களுக்காக அவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடைகள் அமைக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்.சச்சிதானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., பழனி சார் ஆட்சியர் திரு. சீ. கிஷன்குமார், இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு.க.சந்திரமோகன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர்கள் திரு. எம்.கார்த்திக், திரு.எஸ்.மாரிமுத்து மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.