பழனி வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
செ.வெ.எண்:-48/2024
நாள்:-18.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
பழனி வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(18.12.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பழனி வட்டம், பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும், இடைநின்ற மாணவ, மாணவிகள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஈரிலக்க எண்களில் இனமாற்ற கூட்டல், கழித்தல் திருப்புதல் பயிற்சி வழங்கப்பட்டதை பார்வையிட்டு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை பரிசோதித்தார். இதேபோல், 1, 3, 4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கான கணித திருப்புதல் வகுப்பினை ஆய்வு மேற்கொண்டார். கற்றல் – கற்பித்தல் உபகரணங்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவிகளிடம் காலை உணவு மற்றும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் சமையல் கூடத்தில் மதிய உணவு தயார் செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் துாசு இல்லாமல் சுத்தமாக உள்ளதா, கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், காலை உணவுத் திட்டத்தில் உணவுகளை மாணவ, மாணவிகளுக்கு தரமாக, சுகாதாரமானதாக தொடர்ந்து வழங்க வேண்டும், பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
உணவு மற்றும் சமைக்கும் அறைகளை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார். குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை, துரித உணவின் விளைவுகள், நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமையிலான தமிழ்நாடு அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டு அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய அனைத்துத்தரப்பு மக்களை சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.11.2023 அன்று அறிவித்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று(18.12.2024) பழனி வட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வணிகவரித்துறை, தொழிலாளர் நல வாரியம், மீன்வளத்துறை, வீட்டு வசதி வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேலைவாய்ப்புத் துறை, விளையாட்டுத்துறை, பால்வளத்துறை, பதிவுத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கித்துறை, போக்குவரத்துத்துறை, மின்சார வாரியம், பட்டுவளர்ச்சித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், வனத்துறை, தீயணைப்புத்துறை, வேளாண் வணிகம், குழந்தைகள் பாதுகாப்புத்துறை, உள்ளூர் திட்டங்குழுமம், பொதுப்பணித்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கலால் துறை, நில அளவைத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் துறை அலுவலர்களால் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்தும், கிராம நிர்வாக அலுவலகம் மூலமாக வழங்கப்படும் சான்றிதழ்கள் உடனுக்குடன் காலதாமதமின்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நியாயவிலைக் கடைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விவசாய மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பயனடைந்த விவசாயிகள் விபரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் தனி எழுத்தர்(கல்வி) திரு.அ.சரவணக்குமார் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.