மூடு

புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி, சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

வெளியிடப்பட்ட தேதி : 10/01/2025

செ.வெ.எண்:-23/2025

நாள்:10.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி, சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் நாம் போகிப்பண்டிகையை கொண்டாடி வருகின்றோம். பிறக்கும் தைத்திருநாளில் அனைத்தும் புதியதாக அமையட்டும் என்ற எண்ணத்தில் நாம் போகிபண்டிகை அன்று பழையனவற்றை கழித்தல் என்ற வழக்கத்தை நெடுங்காலமாக கடைப்பிடித்து வருகின்றோம். அன்று வீட்டில் பயனற்ற கழிவுத்துணிகள், வயல்வெளி கழிவுகள், கிழிந்த பாய்கள் போன்றவற்றை எரித்து வந்துள்ளோம். இவை சுற்றுச்சூழலை பெருமளவில் மாசுபடுத்தவில்லை.

ஆனால், கடந்த சில வருடங்களாக குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் பல்வேறு வகையான கழிவுகளான டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ரப்பர் போன்றவற்றை எரியூட்டும் வழக்கம் நம்மிடையே காணப்பட்டது. இதனால் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயு கழிவுகள் உற்பத்தியாகி, சுற்றுச்சூழலுக்கும், நமது உடல் நலத்திற்கும் பெருமளவில் தீங்கு விளைவித்து வந்தது, கரித்துகள் காற்றில் பரவி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. பனி நிறைந்த மார்கழி திங்களில் இக்கழிவுகளை எரிப்பதால் உருவாகும் கரும்புகை, பனி மண்டலத்துடன் இணைந்து மேகமூட்டம் போல் காட்சி அளித்து, பார்வையை மறைப்பதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. சில தருணங்களில் இவற்றால் விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவை இணைந்து ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியின் காரணமாகவும், பொதுமக்களின் பொறுப்புணர்ச்சியினாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் போகி பண்டிகையன்று காற்று மாசினை ஏற்படுத்தும் டயர், டியூப், ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பது தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. அதுபோன்றே இந்த வருடமும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன். இதனை காவல்துறையினர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடுவாரியம், தீயணைப்புத்துறை, உள்ளாட்சி அமைப்பினர் ஆகியோர் கண்காணிப்பர்.

நமது சுற்றுக்சூழலின் தரத்தை பேணி பாதுகாப்பதில் ஏற்படும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் நல்கிட வேண்டும். அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.