மூடு

புதுமைப்பெண் திட்டத்தில் 9,285 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். பெண்களின் உயர் கல்வி படிப்பை உறுதி செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவிகள் நெஞ்சார்ந்த நன்றி…

வெளியிடப்பட்ட தேதி : 21/01/2025
.

செ.வெ.எண்:-31/2025

நாள்:-15.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

புதுமைப்பெண் திட்டத்தில் 9,285 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். பெண்களின் உயர் கல்வி படிப்பை உறுதி செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவிகள் நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.09.2022 அன்று சென்னை. பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், “புதுமைப் பெண்” திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்கிட இயலும் என்பதற்கேற்ப, பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உள்ளத்தில் உதித்த உன்னதத் திட்டமே புதுமைப்பெண் திட்டமாகும்.

இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல். உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ‘புதுமைப்பெண் திட்டம்’ பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர் கல்வி பயிலுவது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. அதையடுத்து இத்திட்டம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கும் செயல்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு(அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள்) மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை 30.12.2024 அன்று தூத்துக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள மாணவிகள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2500 மாணவிகள் பயனடைந்து தங்கள் கல்லுாரி படிப்பை நிறைவு செய்துள்ளனர். தற்போது 101 கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் 5,604 மாணவிகள் (அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்) கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். மேலும், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பொறியியல் கல்லூரிகள், 22 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 1 மருத்துவக்கல்லூரி மற்றும் 10 நர்சிங் கல்லூரிகள், 8 தொழிற்பயிற்சி நிலையங்கள், 10 பாலிடெக்னிக் கல்லூரிகள், ஒரு சட்டக்கல்லூரி, ஒரு ஆசிரியர் பயிற்சி நிலையம், ஒரு பல்கலைக்கழகம், 8 பார்மஸி மற்றும் 3 வேளாண்மை கல்லூரிகள் உட்பட 75 கல்லூரிகளில் 3681 மாணவிகள் பயனடைந்துள்ளனர். ஆக மொத்தம் புதுமைப்பெண் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 9,285 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

“புதுமைப் பெண்” திட்டத்தில் பயனடைந்த அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி மாணவி அனிதா தெரிவித்ததாவது:-

நான், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். தந்தை ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். எனக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி உள்ளனர். அப்பாவின் வேலை நிமித்தம் காரணமாக பழனி மற்றும் தாராபுரம் ஆகிய ஊர்களில் வீடு மாறி வசித்து வருகிறோம். தற்போது தாராபுரத்தில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். தற்போது அம்பிளிக்கை அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியில் பி.ஏ.(ஆங்கிலம்) முதலாமாண்டு படித்து வருகிறேன். எனது அக்கா திப்யா இதே கல்லுாரியில் பி.ஏ.(பொருளாதாரம்) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

தந்தையின் வருமானத்தில் குடும்பச் செலவையும் கவனித்துக்கொண்டு, எங்களது படிப்புச் செலவையும் கவனிப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படித்த மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் எனக்கு மாதம் ரூ.1000 கிடைக்கிறது. எனது அக்காவும் இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளார். இந்த தொகை எங்கள் படிப்பிற்கு பயனுள்ளதாக இருப்பதுடன், எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை சமாளிக்கும் வகையில் உள்ளது. எங்களைப்போன்ற ஏழை, எளிய மாணவிகளின கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.

“புதுமைப் பெண்” திட்டத்தில் பயனடைந்த அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி மாணவி மேகப்பிரியா தெரிவித்ததாவது:-

எங்கள் ஊர் கள்ளிமந்தையம் அருகே ஈசக்காம்பட்டி. நான் பிளஸ் 2 வரை கள்ளிமந்தையத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தேன். தற்போது அம்பிளிக்கை அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி.,(ஆடைகள் வடிவமைப்பு) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வருகிறேன். அண்ணன் வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம்.

நான் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தேன். தற்போது, எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லுாரியில்தான் படிக்கிறேன். மாணவிகளை பொறுத்தவரை வெளியூர்களுக்கு சென்று படிப்பது மிகவும் சிரமமான ஒன்று.

அரசு பள்ளிகளில் படித்து தற்போது என்னுடன் கல்லுாரியில் படிக்கும் மாணவிகள் பலர் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற்று வந்தனர். இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படித்த மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் எனக்கு மாதம் ரூ.1000 கிடைக்கிறது. இந்த தொகை எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் ஆடை வடிவமைப்பு படிப்பு படிப்பதால் மெட்டீரியல்கள் வாங்க இந்த தொகை எனக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இதனால் பெற்றோரை சிரமப்படுத்தாமல், படிப்பிற்கு தேவையான உபகரணங்களை நாங்களே வாங்கிக்கொள்கிறோம். எங்களைப்போன்ற ஏழை, எளிய மாணவிகள் உயர்கல்வி படிப்பதை உறுதிப்படுத்திடும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.

பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக “புதுமைப் பெண்” என்னும் உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.