மூடு

பொது சுகாதார பாதுகாவலர்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025
.

செ.வெ.எண்:-51/2025

நாள்:-17.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

பொது சுகாதார பாதுகாவலர்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பொது சுகாதார பாதுகாவலர்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லுாரியில் இன்று(17.04.2025) நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கல்வியும், சுகாதாரமும் தனது இரண்டு கண்கள் என்று முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். சுகாதாரத் திட்டங்களில் உட்கட்டமைப்புகள், வசதிகள், புதிய திட்டங்களை உருவாக்கி, பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தியாவிலேயே, தமிழ்நாடு மருத்துவ துறையில் முன்னோடியாக திகழ்கிறது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தாய்-சேய் சுகாதாரம், தாய்-சேய் பாதுகாப்பு ஆகியவற்றில் பொது சுகாதார பாதுகாவலர்கள் தங்களுடைய அனுபத்தையும், பங்களிப்பையும் அளிக்க வேண்டும்.

திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தை பொறுத்தவரையில் சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், செவிலியர்கள், செவிலியர் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், அனைவருடைய பணி மகத்தான சேவையாகும். கிராமப்புறங்களில் அடித்தட்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும். மலைப்பகுதி கிராமங்கள், உட்கடை கிராமங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சுகாதார துறையின் முன்கள பணியாளர்களான பொது சுகாதார பாதுகாவலர்களுக்கு களப்பணியிலிருந்து மாறுபட்ட அனுபத்தையும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்கள் நம்பிக்கையை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் உடல் நலன் மற்றும் மன நலன் என்பது முதல் ஆயிரம் நாட்களை பொருத்துதான் அக்குழந்தையின் ஆரோக்கியத்தை கணக்கிட முடியும். அந்த ஆயிரம் நாட்களை முக்கியமான நாட்களாக நினைத்து அக்குழந்தைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

பிரசவம் என்பது மருத்துவமனையில்தான் பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்திட வேண்டும்.

குழந்தைகள் எந்த துறையை விரும்புகிறார்களோ அந்த துறையில் அக்குழந்தையை வல்லுநர்களாக உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கும் அக்குழந்தையை சமூகத்திற்கு ஒரு நல்ல குடிமகனாகவோ, குடிமகளாகவோ உருவாக்குவதில் முக்கிய பங்கு உள்ளது.

ஒரு மரத்திற்கு வேர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு சுகாதாரப் பணியாளர்களின் பணி முக்கியமாகும். குழந்தை பிறந்தவுடன் குழந்தையை பெற்ற தாய் பார்ப்பதைவிட சுகாதாரப் பணியாளர்கள்தான் முதலில் பார்க்கின்றனர். அந்த அளவிற்கு பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தாயும் மிக முக்கியம். தாய்-சேய் நலத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்துறை சார்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் நிலையில் உள்ளது.

பொதுமக்களுக்கு 40 வயதிற்கு மேல் சக்கரை நோய், இரத்த அழுத்தம் நோய் உருவாகிறது. இந்நோயினை உணவு முறையில் எவ்வாறு தடுக்க முடியும் என்று முயற்சி மேற்கொள்ள வேண்டும். மருத்துவத்துறை என்பது ஒரு மகத்தான துறை. பொதுமக்களுக்கும், அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கும் செய்யக்கூடிய சேவையாகும். இந்த பணியை ஒரு பொது சேவையாக கருதி சமூகத்தில் பணியாற்ற வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

முகாமில், மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம், இளம் வயது கர்ப்பம் எண்ணிக்கை குறைப்பு, பெண்களுக்கான சமூக நலத்திட்டங்கள், டெங்கு விழிப்புணர்வு, கொள்ளை நோய்த்தடுப்பு, வெப்பம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதை குறைப்பதற்கான ஆலோசனைகள், மக்கள் நலவாழ்வு மையங்களின் தேசிய தர உறுதிச் சான்றிதழ் பெறுவது, சுகாதார துறை செயல்பாடுகளின் புள்ளி விபர அறிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) மரு.செல்வக்குமார் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.