மூடு

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கொடைக்கானல் பகுதியில் நெகிழி பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2024

செ.வெ.எண்:-57/2024

நாள்:-21.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கொடைக்கானல் பகுதியில் நெகிழி பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகளின் இளவரசியாக திகழ்கிறது. பருவகாலம் மட்டுமின்றி தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டம், மாநிலம், நாடுகளிலிருந்து வருகை தருகின்றனர். இதமான குளுமையும், இயற்கை எழிலும் நிரம்பிய கொடைக்கானல் மலையின் பசுமையை, சுற்றுச்சூழலை காக்க, மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் நெகிழி இல்லா பசுமை கொடைக்கானலை உருவாக்க 5 லிட்டருக்கு குறைவான அனைத்து நெகிழி தண்ணீர் பாட்டில்கள், நெகிழியில் அடைக்கப்பட்ட அனைத்து வகையான குளிர்பானங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் நெகிழி பாட்டில்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட, வட்டார அளவில் அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காணிப்பு குழுவினர் ஒவ்வொரு வாரம்/ மாதமும் கடைகள், வியாபார நிறுவனங்களுக்கு சென்று நெகிழி பயன்பாடு, விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அபராதம் விதித்தல், சீல் வைத்தல் உள்ளிட்ட நெகிழி தடுப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் நெகிழி தடுப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு காவல்துறையினர், வனத்துறையினர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் இணைந்து கொடைக்கானல் பகுதிக்கு நெகிழி பாட்டில்கள் கொண்டு செல்வதை தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் 28.06.2024 தேதிய விசாரணை அறிக்கையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் நெகிழி பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதுடன், நெகிழி பாட்டில்களை விற்று வரும், பயன்படுத்தும், விற்பனை செய்யும் தனிநபர், வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் ஒரு நெகிழி பாட்டில்களுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 15 கிராம ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்திலும் 5 லிட்டருக்கு குறைவான நெகிழி தண்ணீர் பாட்டில்கள், அனைத்து வகையான நெகிழி குளிர்பான பாட்டில்கள் வைத்திருத்தல், பயன்படுத்துதல், விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு நெகிழி பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 அபராதம் விதிக்கும் வகையிலான பசுமை வரி விதிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி மற்றும் 15 கிராம ஊராட்சிகளின் கிராம சபை தீர்மானங்களின் அடிப்படையில் 20.08.2024 தேதி முதல் கொடைக்கானல் பகுதியில் 5 லிட்டருக்கும் குறைவான நெகிழி பாட்டில்கள், அனைத்து வகையான நெகிழி குளிர்பான பாட்டில்கள் வைத்திருப்பது, பயன்படுத்துவது, விற்பனை செய்தால் ஒரு நெகிழி பாட்டிலுக்கு ரூ.20 அபராதமாக பசுமை வரி விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, நம்மை மகிழ்விக்கும் கொடைக்கானலின் பசுமையை, சுற்றுச்சூழலை பாதுகாத்து வளமாக்கிட அனைத்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், சிறு குறு வியாபார நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.