மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிப்பட்டி மற்றும் வெரியப்பூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.81.90 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.4.20 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2024
.

செ.வெ.எண்:- 17/2024

நாள்: 12.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிப்பட்டி மற்றும் வெரியப்பூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.81.90 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.4.20 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிப்பட்டி மற்றும் வெரியப்பூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.81.90 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(12.11.2024) திறந்து வைத்து, ரூ.4.20 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

ஆட்சிப்பொறுப்பெற்ற சமயத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் பொது மக்களை பாதுகாப்பதற்காக குடும்ப அட்டைக்கு ரூ.4,000 வழங்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 2.00 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்தனர். அதேபோல் 14 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் சுமார் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட 2.5 இலட்சம் பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மட்டும் 1075 வீடுகள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துாரில் கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு கல்லுாரி, ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கல்லுாரி, ஒட்டன்சத்திரம் – கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கல்லுாரி, ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் ஒரு கல்லுாரி, விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

படித்த இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக மதுரை, கோயம்புத்துார், சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டிய நிலையை மாற்றி காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு போட்டித்தேர்வு பயிற்சி மையம் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வில்(தொகுதி 4) சுமார் 7 மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். தட்டச்சர் பணிக்கு ஒருவர் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு தொகுதி 1 மற்றும் தொகுதி 2 ஆகிய தேர்வுகளில் பல மாணவ, மாணவிகள் முதல்நிலை தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

விளைாயட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பயிற்சி அளிக்கவும் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்துார் ஆகிய பகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 77 கிராம ஊராட்சிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கீரனுார் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் திட்டம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தப்பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இருக்காது, அந்த வகையில் எதிர்கால குடிநீர் பயன்பாட்டையும் கருத்தில்கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்சிப்பொறுப்பேற்ற 42 மாத காலத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சுமார் 6,852 பணிகள் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், லெக்கையன்கோட்டை ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், அரங்கநாதபுரத்தில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், அனைத்துக்கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், சாலைப்புதுாரில் ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 பயணிகள் நிழற்குடைகள் என மொத்தம் ரூ.53.40 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(12.11.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் அவர்கள் “நம்ம ஊரு சூப்பரு” என்று கூறி சுற்றுப்புறத்தை துாய்மையா பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரத்தை பேணிகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சுகாதாரமான ஊராட்சியாக மாற்றிட வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரத்தை வலுப்படுத்த என்றென்றும் ஆதரவாக, உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.

தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காளாஞ்சிபட்டி ஊராட்சியில் தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 பயணிகள் நிழற்குடைகள், வெரியப்பூர் ஊராட்சியில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில், காளாஞ்சிப்பட்டி ஊராட்சியில், காளாஞ்சிப்பட்டி முதல் பாவாயூர் வரை சாலை தரம் உயர்த்துதல் ரூ.2.31 கோடி மதிப்பீட்டிலும், வெரியப்பூர் ஊராட்சியில் ஜவ்வாதுபட்டி – நாகப்பன்பட்டி – மொய்யாண்டியூர் சாலை தரம் உயர்த்துதல் ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலும் என புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். ஜவ்வாதுபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் வெரியப்பூரில் புதிய கிளையை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.சகுந்தலா பாலச்சந்திரன், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.சுபாஷினி, கூட்டுறவு துணைப்பதிவாளர்(பொது விநியோகத் திட்டம்) திரு.இரா.அன்புக்கரசன், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி செல்லம்மாள், திரு.ஜோதீஸ்வரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.