மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இடையக்கோட்டையில் திருக்கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலப்பரப்பில் 6,500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.

வெளியிடப்பட்ட தேதி : 28/01/2025
.

செ.வெ.எண்:-64/2025

நாள்:-27.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இடையக்கோட்டையில் திருக்கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலப்பரப்பில் 6,500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டை, அருள்மிகு திருவேங்கடநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலப்பரப்பில் பாரத ஸ்டேட் வங்கியின் பெருநிறுவன சமுதாய பொறுப்பு நிதியின் (CSR Fund) மூலம் மரக்கன்று நடும் நிகழ்வினை இன்று(27.01.2025) தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

இந்தியாவின் வனபரப்பு 33 சதவீதமாக இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டின் வனப்பகுதி 23 சதவீதமாக உள்ளது. அதனை 10 சதவீதம் உயர்த்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்ற திட்டத்தை முன்னெடுத்தார்கள்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் இடையகோட்டை, அருள்மிகு திருவேங்கடநாதர் சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இன்றைய மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று, முதல் நிகழ்வாக இடையகோட்டைக்கு வருகை தந்து 6.40 இலட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

அன்றைய தினம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களும், நானும், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சுமார் 6,000 மாணவர்களுடன் இணைந்து நான்கு மணி நேரத்தில் சுமார் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. அந்நிகழ்வு நடைபெற்று 25 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மரக்கன்றுகள் எல்லாம் 15 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளன. மரக்கன்றுகள் நடுவதற்கு திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை தந்து பெருந்துணையாக இருந்திட்ட மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும், அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆயிரக்கணக்கான திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி, ஆக்கிரமிப்பிலுள்ள கோயில் நிலங்களை மீட்டெடுத்து, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து சாதனை படைத்திருக்கின்ற மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் வடசென்னை மாவட்ட கழக செயலாளராகவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவராகவும் திறம்பட சுழன்று பணியாற்றி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “செயல்பாபு“ என்று பாராட்டப்பட்டவராவார்.

இன்றைய தினம் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பல்பயன் காடுகளை உருவாக்குகின்ற வகையில் உயிர் மதிப்பு காடு, தடிமரக்காடு, ஒட்டுப்பலகை மரக்காடு, தீக்குச்சி மரக்காடு, எண்ணெய்வித்து மரக்காடு, எரிசக்தி மரக்காடு, மருத்துவ மரக்காடு, ராசிவனம் மரக்காடு, நறுமணக்காடு, பசுமை மாறா காடு, பூமரக்காடு மற்றும் தடிமரம் அல்லாத வனப் பொருட்கள் காடு, தல விருட்சக காடு என பல வகையான 6,500 மரக்கன்றுகளை நடுகின்றோம். 2024-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு அனுமதி வழங்கியதின் அடிப்படையில் இன்றைக்கு பணியை துவங்குவதற்கும், கடந்த ஆண்டு சி.எஸ்.ஆர். நிதி வழங்கியது போல் இந்த ஆண்டும் ரூ.2.00 கோடி வழங்கியமைக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அலுவலர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மேலும், கரூர் வைஸ்யா வங்கி, வனத்துறை, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் என நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு 13 இடங்களில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை அமைத்திட வேண்டும் என கோரியதன் அடிப்படையில் ஒரு கிளை பிப்ரவரி மாதம் தொடங்கப்படவுள்ளது. மீதமுள்ள 12 வங்கி கிளைகளையும் விரைவில் கொண்டு வருவதற்கு வங்கி உயர் அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின் 804 ஏக்கரில் மரம் நடுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி தந்துள்ளது. மேலும், திருக்கோயில்கள் சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் ஒரு மகளிர் கல்லூரியை ஒட்டன்சத்திரத்தில் அமைத்து கொடுத்தார்கள். அந்த கல்லூரிக்கு சொந்த கட்டடம் கட்ட ரூ.25.00 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளார்கள். அதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும். பழனி திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சி 34 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இப்படி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தோடு அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றும், மக்கள் அனைவரும் வளம் பெற வேண்டும் என்பதற்காகவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் கீரனூரில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரம் தொகுதியிலுள்ள பல்வேறு கிராமப்புற திருக்கோயில் மற்றும் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பெருந்திட்ட வரைவின் கீழ் பழனி, திருச்செந்தூர் போன்ற திருக்கோயில்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்படும் மரங்களினால் எதிர்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு நல்ல மழை பொழிந்து விவசாயிகளும், பொதுமக்களும் பயன் பெறுவார்கள். அதற்காகத்தான் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பேசியதாவது:-

அந்த காலத்தில் செல்வந்தர்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கட்டடங்களை கட்டி வழங்கினார்கள். தங்களது சந்ததியினருக்கு இக்கட்டடம் என்னால் கட்டப்பட்டது என்று பெருமையோடு கூறுவார்கள். ஆனால் இந்த காலத்தில் வசதி வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் போன்றவர்கள் அரசு திட்டங்களை கொண்டுவந்து அந்த பகுதியில் தங்கள் நிலையினை நிலைநிறுத்த கூடும். செல்வந்தர்களாக இல்லாதவர்கள் கூட தங்களை நினைவு கூற வேண்டும் என்று கட்டுகின்ற கட்டடங்களுக்கு கூட 50 ஆண்டுகள் தான் ஆயுட்காலம். ஆனால் நீங்கள் ஒரு மரத்தை நட்டு வளர்த்தால் அது இரண்டு சந்ததியினருக்கு அதாவது நூறாண்டுகளை கடந்து இந்த மரம் எங்கள் தகப்பனார், பாட்டனார் நட்டது என்று பெருமையோடு கூறும் வரலாறு உருவாகும். ஒரு மரத்துக்கே இப்படி வரலாறு என்றால் இன்றைக்கு லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு அழியா புகழைத் தேடிக் கொண்டிருக்கின்ற அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

விடாமுயற்சிக்கு சொந்தக்காரரான அவர் கடந்த காலங்களில் எதிர்கட்சி கொறடாவாக இருந்தபோது அவரது தொகுதிக்கு பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனை, சாலைகள், பாலங்கள் என கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்பார். ஒருமுறை அன்பு தலைவர் தளபதி அவர்களே, நீங்கள் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு மட்டும் சட்டமன்ற உறுப்பினர் அல்ல, திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற கொறடா என்று கூறினார். அந்த அளவிற்கு தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எந்நாளும் உழைத்திட வேண்டும் என்று முதன்மையான சட்டமன்ற உறுப்பினராக அண்ணன் சக்கரபாணி அவர்கள் திகழ்கின்றார் என்றால் அது மிகையாகாது.

சிலர் நூறு ரூபாய் அளவிற்கு உதவி செய்தாலே அதற்கு விளம்பரம் தேடுவார்கள். சென்னையில் சாலைகள் மற்றும் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று அவரிடம் கோரினால் எண்ணிக்கையை மட்டும் தான் கேட்பார். அள்ளிக் கொடுக்கின்ற மனம் படைத்த அவரை மரக்கன்றுகளை நடுகின்ற அமைச்சர் என்று சேர்த்தே அழைக்கலாம். அவருடைய செயல்களால் இந்து சமய அறநிலையத்துறைக்கும் பாராட்டு கிடைக்கிறது. இப்படி மரம் வளர்ப்பதற்காக எந்த சட்டமன்ற உறுப்பினரும் எங்களை அணுகவில்லை. 276 ஏக்கர் நிலத்தினை மரங்கள் நடுவதற்காக சட்டப் போராட்டமே நடத்தி அதிலும் வெற்றி கண்டு இந்த பகுதியினுடைய வளத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் துணையாக இருக்கின்ற அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

276 ஏக்கரோடு நின்று விடுமா என்று பார்த்தால் அவர் கூடுதலாக 327 ஏக்கர் நிலப்பரப்பை மரக்கன்றுகள் நடுவதற்காக கேட்டிருக்கிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவினை பெற்று, அவர் கோரிய இடங்கள் மரங்களை நடுவதற்காக வழங்கப்படும். அந்த விழாவிற்கு நானும் வருவேன் என்பதை தெரிவித்துக் கொண்டு நல்ல உள்ளம் படைத்த அவர் பல்லாண்டு, நோய் நொடி இல்லாமல் எல்லா வளமும் நலமும் பெற்று நம் உயிரினும் மேலான அன்பு தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் தளபதி அவர்களின் கரங்களுக்கு வலு சேர்ப்பார், அவரின் புகழுக்கு புகழ் சேர்ப்பார், என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., பழனி சார் ஆட்சியர் திரு.சீ.கிஷன்குமார், இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் திரு.பர்மிந்தர் சிங், பொது மேலாளர் திரு.ஜொ.ஸ்ரீநிவாச ராவ், இணை ஆணையர்கள் திரு. எம்.கார்த்திக், திரு.எஸ்.மாரிமுத்து, கிராமியம் டிரஸ்ட் திரு.நாராயணன், கூடு டிரஸ்ட் திரு.ஜெயதீசன் மற்றும் அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.