மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி வட்டம், எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
செ.வெ.எண்:-17/2025
நாள்: 04.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி வட்டம், எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் இன்று (03.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து எரமநாயக்கன்பட்டியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் புதிய சாலைப்பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து டி.பி. 23 எரமநாயக்கன்பட்டி புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திறக்கப்பட்டது. நபார்டு திட்டம் 2025-26 மூலம் ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் எரமநாயக்கன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2025-26 -ன் கீழ் ரூ.50.32 இலட்சம் மதிப்பீட்டில் எரமநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு வரை செல்லும் சாலை, ரூ.67.07 இலட்சம் மதிப்பீட்டில் அமரப்புண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் கிழக்கே செங்குளம் வரையிலான சாலை மற்றும் ரூ.60.26 இலட்சம் மதிப்பீட்டில் மேலக்கோட்டை ஊராட்சி வத்தக்கவுண்டன் வலசு முதல் எல்லைத்தோட்டம் வரை மரிச்சிலம்பு சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் முகாமினை பார்வையிட்டு பின் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிடும் வகையில் உங்கள் ஊரைத்தேடி, உங்கள் இல்லத்தைத்தேடி சேவை செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதுவரை 5,000 முகாம்கள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 5,000 முகாம்கள் நடைபெறவுள்ளது.
எரமநாயக்கன்பட்டியில் இன்று பொன்னான நாள் ஏனென்றால் கணக்கன்பட்டி கூட்டுறவு வங்கியில் இதுவரை மக்கள் கடன் வாங்கி வந்த நிலையில் தற்பொழுது எரமநாயக்கன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி திறக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இனிவரும் காலங்களில் நகைக்கடன், பயிர்க்கடன் ஆகியவை வாங்குவதற்கு எரமநாயக்கன்பட்டியில் திறக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பயன்படுத்துமாறு தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2023 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் 711 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 402 பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். மேலும் தகுதியுள்ள நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 3 சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் (நான்கு சக்கர வாகனம்) பெற்ற பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற அரசின் உதவித்தொகை பெறும் பெண்கள் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்கள்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். புரச்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். டாக்டர் கலைஞர் அவர்கள் சத்துணவுடன் வாரத்தில் 3 நாட்கள் முட்டைகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்க காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே என தெரிவித்தார்.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோன்று மாணவர்கள் ”தமிழ்புதல்வன்” திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். 20 இலட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இந்த அரசானது மாத உதவித்தொகை ரூபாய் 750/- தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத்தொகை, ஆக மொத்தமாக மாதந்தோறும் ரூபாய் 1750/- வங்கிக் கணக்கில் வாயிலாக வழங்கப்படுகிறது..
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு 2 இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
பொதுமக்கள் குடிமைப்பொருட்கள் பெற்று பயன்பெறும் வகையில் முழு நேர நியாயவிலைக்கடை, பகுதிநேர நியாயவிலைக்கடை என தமிழ்நாட்டில் 3000 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 300 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளில் 2.5 இலட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. 2024-25 ல் 19 வீடுகள், 2025-26 ல் 12 வீடுகள் என மொத்தம் 31 வீடுகள் ரூ.1.8 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து 05 மகளிர் குழுக்களுக்கு ரூ.93,60,000 மதிப்பில் கடன் தொகைக்கான காசோலையினை வழங்கினார். ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 01 நபருக்கு ரூ.70,000 க்கான பணி ஆணை வழங்கினார். மேலும் 05 நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.சுபாஷினி (கூட்டுறவு இணைப்பதிவாளர் பொறுப்பு), பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா , நளினா உட்பட பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.